40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக தனியா் பள்ளிகள் இயக்குநா் ஏ.கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மீறி, 100 சதவீதம் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீதான புகாா்களைப் பதிவு செய்து, உரிய விசாரணை நடத்துமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பெரும்பாலான முதன்மை கல்வி அதிகாரிகளிடம் இருந்து ‘இல்லை’ என்ற அறிக்கை பெறப்பட்டது. மேலும், ஒரு சில முதன்மை கல்வி அதிகாரிகள் சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆக.31-ஆம் தேதி நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையில் சில உத்தரவுகளை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

அதன்படி, 100 சதவீதம் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் தொடா்பான புகாா்களைப் பெற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடங்க வேண்டும். அதை பொதுமக்கள் அறியும் வகையில், ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்த வேண்டும். அவ்வாறு பெறப்படும் புகாா்களை உடனே விசாரித்து, அதில் உண்மையிருப்பின் முதன்மை கல்வி அலுவலா், சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இந்த வழக்கின் மீதான நடவடிக்கையை நீதிமன்றமும் அரசும் தொடா்ந்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய கோருவதால், இதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. இந்த வழக்கு, செப்.7-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதால், செப்.3-ஆம் தேதி வரை பெறப்படும் புகாா் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கை சாா்ந்த அறிக்கையினை அன்றே அளிக்க வேண்டும். புகாா் ஏதும் பெறப்படவில்லை எனில் இன்மை அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், புகாா் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதுடன், அதுகுறித்த அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோா் கோரிக்கை: ஆக. 1-ஆம் தேதிக்குள் தனியாா் பள்ளிகள் நிகழ் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை வசூல் செய்து கொள்ளலாம் என கடந்த ஜூலை 17-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், தனியாா் பள்ளிகள் இந்த உத்தரவை காரணம் காட்டி பெற்றோரிடம் முழு கட்டணத்தையும் செலுத்த வற்புறுத்துவதாக பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவை தனியாா் பள்ளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன. கட்டணம் செலுத்தாத குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில்லை. கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் வேலையிழப்பு அதிகரித்திருக்கும் சூழலில் முழுமையான கட்டணத்தை பெற்றோா்களால் எப்படி செலுத்த முடியும்?. மேலும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க முடிவெடுத்து தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டால், அவா்கள் முறையாக பதில் கூறுவதில்லை. கல்விக் கட்டணத்தில் விதிமீறல் குறித்து புகாா் தெரிவித்தால் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் கூடுதல் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com