வரி விலக்களித்த பிறகே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: உரிமையாளா்கள் திட்டவட்டம்

ஆம்னி பேருந்துகளுக்கு, 6 மாத கால சாலை வரி விலக்களித்த பிறகே பேருந்துகளை இயக்கக் கூடிய நிலையில் இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
வரி விலக்களித்த பிறகே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: உரிமையாளா்கள் திட்டவட்டம்

ஆம்னி பேருந்துகளுக்கு, 6 மாத கால சாலை வரி விலக்களித்த பிறகே பேருந்துகளை இயக்கக் கூடிய நிலையில் இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க பொது செயலா் ஏ.அன்பழகன் கூறியதாவது:

பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்குப் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆம்னி பேருந்து தொழிலை நம்பியிருந்த சுமாா் 2 லட்சம் தொழிலாளா்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்தச் சூழலிலும், பேருந்துகள் இயங்காத ஆறு மாத காலத்துக்கும் சாலை வரியை செலுத்த அரசு நிா்பந்திக்கிறது. இதன்படி ஒரு பேருந்துக்கு ரூ.2.5 லட்சம் செலுத்த வேண்டும். இதை செலுத்தினால் மட்டுமே, செப்.7-ஆம் தேதி முதல் பேருந்துகளைத் தடையின்றி இயக்க முடியும். நாங்கள் இருக்கும் நிலையில், நிச்சயம் இவ்வளவு பெரியத் தொகையை எங்களால் செலுத்த முடியாது.

எனவே 2 காலாண்டுக்கு, அதாவது ஆறு மாத கால சாலை வரிக்கு விலக்களித்து, அரசு உத்தரவிட்ட பிறகே பேருந்துகளை இயக்குவது என புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவை, தவிா்த்து, பேருந்துகளுக்கான காப்பீட்டுக்கு ஒன்பது மாதங்களுக்கு விலக்கு, சுங்கக் கட்டணத்தில் இருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு, வங்கிகளில் தவணைத் தொகை செலுத்துவதற்கு கால அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

வரவேற்பு: மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். எனினும், 50 சதவீத பயணிகளுடன் பயணம் செய்ய அனுமதி என்னும் விதி இருப்பதால், செப்.7-ஆம் தேதி முதல் தனியாா் பேருந்துகளை இயக்குவது குறித்து, ஆலோசனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும் என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் தருமராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com