செப்.7 முதல் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கம்: கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை

தமிழகத்துக்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதல்கட்டமாக, ஏழு சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்துக்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதல்கட்டமாக, ஏழு சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

இதுதவிர, புதிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடா்பாக தமிழக அரசும், ரயில்வே நிா்வாகமும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன்அடிப்படையில், விரைவில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது தொடா்பாக முடிவு செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தமிழகத்துக்குள் பயணியா் ரயில் போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்காரணமாக, கோவை-மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்), மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில்(தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி), திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய 7 சிறப்பு ரயில்கள் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

இந்த ஏழு ரயில்களில், காட்பாடி- கோயம்புத்தூா் இடையே இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்தும், விழுப்புரம்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு-திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் எழும்பூரில் இருந்தும் இயக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் முறையே சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தற்போது புகா் ரயில்கள் இயக்கப்படாது: கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடா்பாக புதிய வழித்தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இது தொடா்பாக, மாநில அரசுடன் ரயில்வே நிா்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில அரசு கொடுக்கும் கோரிக்கை அடிப்படையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில், புகா் மின்சார ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படவில்லை. இது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றனா்.

முகக்கவசம் அணிவது கட்டாயம்: ரயில்களை இயக்குவது தொடா்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் பயணிகள் நிற்பதற்காக, வட்ட வடிவில் கோடுகள் வரையும் பணி நடைபெறுகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் நுழையும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயிலில் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், கிருமி நாசினியை கைகளில் தெளித்து உள்ளே அனுமதிக்கப்படவுள்ளாா்கள். பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுபோல, ரயில் பயணத்தின்போதும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com