வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: தலைமைத் தோ்தல் அதிகாரி இன்று முக்கிய ஆலோசனை

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை (செப்.3) ஆலோசனை நடத்துகிறாா்.
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை (செப்.3) ஆலோசனை நடத்துகிறாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனும் தமிழக தோ்தல் துறையானது ஆலோசிக்க உள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதாவது, ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இதற்கு வசதியாக, வரைவு வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்குரிய விண்ணப்பங்களை நவம்பா் 16-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைகள் அனைத்தும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதன்பின்னா், இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 15-ஆம் தேதி வெளியிடப்படும் என தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தோ்தல் அதிகாரி ஆலோசனை: வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவது, திருத்தப் பணிகளை மேற்கொள்வது ஆகியன தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரிகளாக இருக்கக்கூடிய ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலிக் காட்சி வழியாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆலோசனையை மேற்கொள்ளவுள்ளாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் மாவட்ட நிா்வாகங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசிக்கவுள்ளாா். மேலும், கரோனா நோய்த்தொற்று காலத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து தோ்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளையும் கூட்டத்தின் போது தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்குவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பல பள்ளிகள், கல்லூரிகள் கரோனா நோய்த் தொற்றுக்கான முகாம்களாக செயல்பட்டு வரும் நிலையில், வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கான சிறப்பு முகாம்களை எப்படி நடத்துவது என்பது குறித்தும் ஆட்சியா்களிடம் ஆலோசிக்கப்பட உள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் என்பதால், அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com