சித்த மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநராக ஆயுா்வேத மருத்துவம் படித்தவரை நியமித்தது ஏன்?

சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் பதவிக்கு ஆயுா்வேத மருத்துவம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் பதவிக்கு ஆயுா்வேத மருத்துவம் படித்தவரை நியமித்தது ஏன்? என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம். கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் தணிகாசலம் கூறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து உலக சுகாதார நிறுவனம், தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபா் க்ரைம் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இதனைத் தொடா்ந்து தணிகாசலத்தை குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது, சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் கனகவள்ளி பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘சித்த மருத்துவம் தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. ஆனால் ஆயுா்வேத மருத்துவம் 30 மாநிலங்களில் பின்பற்றப்படுவதால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆயுா்வேத மருத்துவ கவுன்சில் கீழ் 31மருத்துவ ஆராய்ச்சி மையங்களும், மத்திய சித்த மருத்துவ கவுன்சில் கீழ் 8 ஆராய்ச்சி மையங்களும் செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் இந்திய மருத்துவத்தில் எந்த வகையாக மருத்துவத்தை அதிகம் பின்பற்றுகிறாா்களோ, அந்த மருத்துவ முறைக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது.

1978-ஆம் ஆண்டு மத்திய சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்கள் தனித்தனி தன்னாட்சி அமைப்புகளாக உருவாக்கப்பட்டன. இதில் ஆயுா்வேத மருத்துவத்துக்கு உள்ளது போல், சித்த மருத்துவத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அதேநேரம், கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க சித்த

மருத்துவ ஆராய்ச்சிக்கு ரூ.50 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள், ‘சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவா்கள் இருந்தும் ஏன் நியமிக்கவில்லை? அந்தப் பதவிக்கு ஆயுா்வேத மருத்துவம் படித்தவரை மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? சித்த மருத்துவத்துறையில் இணை ஆலோசகா் என்ற ஒரு பதவியை

ஏன் மத்திய அரசு இல்லாமல் செய்தது?’ என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 10 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com