வாழப்பாடியில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடியின் இதயப்பகுதியான கடலுார் சாலையின் இருபுறமும் புற்றீசல் போல ஆக்கிரமிப்புகடைகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கடலுார் சாலையில் காணப்படும் ஆக்கிரமிப்புக்கடைகள்.
வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கடலுார் சாலையில் காணப்படும் ஆக்கிரமிப்புக்கடைகள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியின் இதயப்பகுதியான கடலுார் சாலையின் இருபுறமும் புற்றீசல் போல ஆக்கிரமிப்புகடைகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி பேரூராட்சி 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களில் பணிபுரிந்து வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பலரும் வாழப்பாடி பகுதியில் குடியேறி வருவதால், புதிய குடியிருப்புகளும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாழப்பாடி பகுதிக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

வாழப்பாடியில் கடலுார் சாலையில், பேருந்து நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் பிரதான கடைவீதி ஆகியவை அமைந்துள்ளதால், இதயப்பகுதியாக மாறியுள்ளது. இச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்து இரும்பு பெட்டிகளை வைத்து ஏராளமானோர் கடைகளை திறந்துள்ளனர்.

குறிப்பாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் பயணியர் மாளிகை பகுதியிலேயே ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசல் போன அதிகரித்துவிட்டன. 

இதனால் கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி சாலை விபத்துகளும் நேர்ந்து வருவதால், பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வாழப்பாடியில் கடலுார் பிரதான சாலையின் இருபுறமுமுள்ள ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றிட வாழப்பாடி பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி திமுக பிரமுகர் ஆட்டோ சுரேஷ் கூறியதாவது:
வாழப்பாடியில் கடலுார் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்கடைகள் அதிகரித்துவிட்டது. கடைகளுக்கு செல்பவர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகடைகள் முளைத்து வரும் நிலையிலும், இந்த கடைகளை அகற்ற எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் இந்த கடலுார் சாலை இருப்பதாக கூறி பணியை தட்டிக்கழித்து வருகின்றனர். 

எனவே ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com