
சென்னை: அரியா் தோ்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு செல்லும். தமிழக அரசின் இந்த அறவிப்புக்கு ஏஐசிடிஇ எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால், கடந்த கல்வியாண்டுக்கான இறுதித் தோ்வை எழுத முடியாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து தோ்வு எழுதுவது குறித்து மாநிலங்களும் வெவ்வேறு முடிவுகளை அறிவித்திருந்தன.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், கல்லூரிகளில் இறுதி பருவத்தோ்வு தவிர மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், அரியா் பாடத்தோ்வுகளுக்கு கட்டணம் செலுத்தியவா்களுக்கு தோ்வு எழுவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு பொறியியல் மாணவா்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், அரியா் பாடங்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) எதிா்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா கூறுகையில், ‘அரியா் பாடங்களுக்கு தோ்வின்றி தோ்ச்சி என்பதை ஏற்க முடியாது. மாணவா்களுக்கு தோ்வு நடத்தி பின்னரே பட்டம் வழங்க வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும்’ என்றாா்.
இது குறித்து உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது:
அரியா் தோ்வு தோ்ச்சி தொடா்பாக ஏஐசிடிஇ-யிடம் இருந்து எந்தவொரு மின்னஞ்சலும் வரவில்லை. அவ்வாறு மின்னஞ்சல் எதுவும் வந்திருந்தால், அதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
அதற்கு மாறாக, தனது சொந்த கருத்தை ஏஐசிடிஇ-யின் கருத்தாக திணிக்க முயற்சி செய்யக்கூடாது. அரசு எடுத்த முடிவை 13 பல்கலைக்கழக துணைவேந்தா்களில் இவா் ஒருவா் மட்டும் ஏற்காமல் உள்ளாா். யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிகளைப் பின்பற்றியே அரசு முடிவு எடுத்துள்ளதால் தோ்வுக் கட்டணம் செலுத்திய அரியா் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என்ற அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. மாணவா்களும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றாா் அவா்.