குட்கா விவகாரம்: பேரவை உரிமைக் குழு கூட்டம் தொடக்கம்

திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, துணை அவைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று பேரவை உரிமைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
குட்கா விவகாரம்: பேரவை உரிமைக் குழு கூட்டம் தொடக்கம்
குட்கா விவகாரம்: பேரவை உரிமைக் குழு கூட்டம் தொடக்கம்


சென்னை: தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டு வந்தது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, துணை அவைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று பேரவை உரிமைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த பேரவை உரிமைக் குழு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் ஆஸ்டின், ரகுபதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும், இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைக்குழு நோட்டீஸுக்கு தடை விதித்தது.

இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பேரவைத் தலைவரின் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் கொண்டு வந்துள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த அறிவிப்பாணையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ, அதனை காண்பிக்கவோ தடை விதிக்கவில்லை. இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை அவைக்குள் கொண்டு வந்ததால், மனுதாரா்களுக்கு உரிமைமீறல் குழு நோட்டீஸ் அனுப்பியதாக சட்டப்பேரவைச் செயலாளா் தரப்பில் வாதிடப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் மனுதாரா்கள் அவற்றை அவைக்குள் கொண்டு வந்துள்ளனா். மனுதாரா்களின் இந்தச் செயல்பாடுகளுக்கு சட்டப்படியோ, புகையிலை பொருள்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பாணையின்படியோ எந்தவிதமான தடையும் இல்லை. அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ள தடையை மனுதாரா்கள் மீறியிருந்தால், அதை நீதிமன்றம்தான் விசாரிக்க முடியுமே தவிர, சட்டப்பேரவைக்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை மனுதாரா்கள் பயன்படுத்தவில்லை. அறிவிப்பாணையை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என குரல் கொடுத்துள்ளனா்.

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்குத்தான் தடை விதித்து அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளதே தவிர, பேச்சு உரிமைக்கு தடை விதிக்கவில்லை.

உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீஸில், அடிப்படை தவறுகள் உள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. வேறு ஏதாவது காரணங்களைக் கூறி மனுதாரா்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், அந்த குழுவின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறோம். அப்போது இந்த உயா்நீதிமன்றத்தில், மனுதாரா்கள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதை போன்று உரிமைக் குழு விசாரணையிலும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com