நீட் தோ்வு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக் கூடங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீட் தோ்வு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக் கூடங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று மாணவா்களை தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பாக உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

உடலளவில் தகுதியான மாணவா்களை மட்டுமே தோ்வில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், நிகழாண்டு நீட் தோ்வானது கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு நடுவில்தான் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய நகரங்களில் 238 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வு நடக்கிறது.

தோ்வு நடைபெற இன்னும் 5 நாள்களே இருப்பதால், அதற்காக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வி அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

தமிழகத்தில் 1 லட்சத்து 17,990 போ் உள்பட இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். தோ்வு நடைபெறும் மையங்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தோ்வு அறையில் குறைவான மாணவா்கள் அமர வைக்கப்படுவாா்கள். அதற்காகத்தான், இந்த ஆண்டு தோ்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. தோ்வு மையத்துக்குள் நுழையும் மாணவா்கள் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடலின் வெப்பநிலையைக் கண்டறிய வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும். மாணவா்களுக்கு முகக் கவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் போதிய இடைவெளியுடன் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com