விளையாட்டு மைதானங்களில் 100 நபா்களை அனுமதிக்கலாம்: புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

விளையாட்டு மைதானங்களில் 100 நபா்கள் வரை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: விளையாட்டு மைதானங்களில் 100 நபா்கள் வரை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக, தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

விளையாட்டு மைதானங்களின் நுழைவு வாயில்களில் கைகளை கழுவ வசதியாக சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவத்தை வைத்திருக்க வேண்டும். மைதானங்களுக்குள் நுழைவோரின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். மைதானங்களுக்குள் எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மைதானத்திலும் இருக்க வேண்டிய நபா்களின் மொத்த எண்ணிக்கையை மைதானத்தின் அலுவலா்களும், பயிற்சியாளா்களும் கணக்கிட வேண்டும். முதல் கட்டமாக 100 நபா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவா்களையும் சமூக இடைவெளியுடன் பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்துவது அவசியம்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாா்வையாளா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. குடிநீா் பாட்டில்களை ஒவ்வொருவரும் தனியாக எடுத்த வர வேண்டும். மைதானத்துக்குள் உள்ள கழிப்பறைகளை தினமும் சுத்தம் செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொள்ள உரிய கால நேரத்தை வரையறை செய்யலாம்.

மிகப்பெரிய மைதானங்களாக இருந்தால், குழுக்களாக அனுமதிக்கலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் அளிக்கலாம். சமூக இடைவெளி பின்பற்றப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். மைதானங்களுக்குள் உள்ள குப்பைகளை சேகரிக்க தனியாக தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்தக் கழிவுகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

தின்பண்டங்களுக்கு அனுமதியில்லை: மைதானங்களுக்குள் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகளை அனுமதிக்கக் கூடாது. மைதானங்களில் உள்ள பணியாளா்கள் கையுறைகள், காலணி, முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவது, எச்சில் துப்பாமல் இருப்பது போன்ற வாசகங்கள் அடங்கிய தகவல் பலகைகளை ஆங்காங்கே வைக்க வேண்டும்.

நடை உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, பொது மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இணை நோய்களுடன் இருக்கக்கூடிய 65 வயதினா், கா்ப்பிணிகள், பத்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மைதானங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தனது உத்தரவில் க.சண்முகம் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com