'தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அதிமுக அரசு எடுக்கவில்லை'

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அதிமுக அரசு எடுக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
கேஎஸ் அழகிரி
கேஎஸ் அழகிரி

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அதிமுக அரசு எடுக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. கரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், எந்த கோரிக்கையையும் மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஏழை, எளிய கிராமப்புற மக்கள், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறதே என்ற மன உளைச்சலின் காரணமாக அனிதா, விக்னேஷ் போன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அதிமுக அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும் நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அனிதா, விக்னேஷ் போன்றவர்களின் தற்கொலை சாவுகளுக்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பாகும். இதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் விரைவில் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மறைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com