திமுக பொதுச்செயலாளரானார் துரைமுருகன்

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் புதன்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி ஒரு மனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  டி.ஆர்.பாலு  ஆகியோருடன் கட்சித் தலைவர் ஸ்டாலின்.
கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு ஆகியோருடன் கட்சித் தலைவர் ஸ்டாலின்.

சென்னை:திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் புதன்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைப் பொதுச்செயலாளராக பொன்முடியையும், ஆ.ராசாவையும் நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்த மிக முக்கிய பதவிகள் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகும். இந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக, திமுக பொதுக்குழு காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது. 

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்க மேடையில் அமர்ந்து பொதுக்குழுவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தனர்.

மேடைக்குக் கீழ் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி  உள்பட முக்கிய  உறுப்பினர்கள் 60}க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்திருந்தனர். 

இதைத் தவிர்த்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 67 இடங்களில் மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். மொத்தம் 3,500 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

போட்டியின்றித் தேர்வு: பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் மனு அளிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், துரைமுருகன், டி.ஆர்.பாலுவைத் தவிர்த்து வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். துரைமுருகனைத் தேர்வு செய்ய 218 பேரும், டி.ஆர்.பாலுவை 125 பேரும் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் இருந்தனர்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக கூடுதலாக பொன்முடியையும், ஆ.ராசாவையும் நியமிக்கப்பதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏற்கெனவே, திமுகவில் 3 துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தம் 5 துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளனர்.

பொதுச் செயலாளர் துரைமுருகன்: "பெரியார்தான் என் தலைவர். அதனால் தலைவர் பதவி வகிக்க மாட்டேன்' என்று திமுகவின் பொதுச் செயலாளராகவே இருந்தவர் அண்ணா. அதன் பிறகு, அதில் மாற்றம் செய்யப்பட்டு தலைவராக கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தனர். பிறகு க.அன்பழகனே பொதுச் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தார். தற்போது துரைமுருகன் பொதுச் செயலாளராகியுள்ளார்.

துரைமுருகன் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்து வருகிறார். திமுகவில் தணிக்கைக் குழு உறுப்பினர், மாணவர் அணிச் செயலாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார்.

பொருளாளர் டி.ஆர்.பாலு: கருணாநிதி, எம்ஜிஆர், சாதிக் பாட்சா, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பொருளாளர் பதவியை வகித்துள்ளனர். தற்போது டி.ஆர்.பாலு பொருளாளராகியுள்ளார். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து, சுற்றுச்சூழல், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்துள்ளார். திமுகவில் பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து தற்போது பொருளாளராகியுள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, மு.க.ஸ்டாலின் தொடங்கி மாவட்ட வாரியாக மூத்த தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துப் பேசினர்.  மு.க.ஸ்டாலின் பேசும்போது, சட்டப்பேரவையில் சூப்பர் ஸ்டார் துரைமுருகன். அவரைப் போன்ற மூத்த உறுப்பினர் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை.

சட்டப்பேரவையிலும் இல்லை என்று அவர் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது துரைமுருகன் கண்ணீர் சிந்தினார். கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்டோர் ஏற்புரையும் வழங்கினர். சுமார்  5 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு தீர்மானங்கள்: புதியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சூளுரை ஏற்போம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பேரவைத் தேர்தலில் போராடித்தான் வெற்றி பெற முடியும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, செப். 9: வரும் சட்டப்பேரவை தேர்தலில்  போராடித்தான் திமுக வெற்றியைப் பெற முடியும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது: விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். திமுகவின் கிளைக் கழகத் தேர்தல் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீதத்தையும் விரைந்து மாவட்டச் செயலாளர்கள் முடிக்க வேண்டும். தேர்தல் பணியை 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். கரோனாவால் அந்தப் பணி தாமதமாகிவிட்டது.  விரைந்து செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நாம்தான் வெற்றிபெற போகிறோம். ஆட்சிக்கு வரப் போகிறோம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேசமயம் போராடித்தான் அந்த வெற்றியைப் பெற இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில்  அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் எண்ணமாக இருக்க வேண்டும். இதுவரை எப்படிச் செயல்பட்டோம் என்பதைவிட, எப்படிச் செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம். அடுத்த 6 மாத கால உழைப்பின் காரணமாகத்தான் திமுக ஆட்சியைப் பெற்றது என்கிற பெயரைப் பெற்றிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com