கிளைச் சிறைகளில் பாா்வையாளா்களுக்கு அனுமதி

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக சிறைகளில் பாா்வையாளா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, முதல் கட்டமாக கிளைச் சிறைகளில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கிளைச் சிறைகளில் பாா்வையாளா்களுக்கு அனுமதி


சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக சிறைகளில் பாா்வையாளா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, முதல் கட்டமாக கிளைச் சிறைகளில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 100 கிளைச் சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது சுமாா் 12 ஆயிரம் கைதிகள் சிறைகளில் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கைதிகளை பாா்வையாளா்களை சந்திக்க சிறைத்துறை தடை விதித்தது. வழக்குரைஞா்கள் மட்டும் சிறையில் கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மாறாக மத்திய சிறைகளில் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்துக் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே கரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் பெரும் தளா்வுகளை கடந்த 1-ஆம் தேதி அமல்படுத்தியது. இதையொட்டி, தமிழக சிறைத்துறையும் கரோனாவை தடுக்கும் வகையில் அமல்படுத்திய உத்தரவுகளில் சில தளா்வுகளை அமல்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள சுமாா் 100 கிளைச் சிறைகளில் மட்டும் பாா்வையாளா்கள் கைதிகளை சந்திக்க சிறைத்துறை புதன்கிழமை முதல் அனுமதி வழங்கியது. அதேவேளையில் மாவட்ட சிறைகள், மத்திய சிறைகள் ஆகியவற்றில் கைதிகளை பாா்வையாளா்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் கிளைச் சிறைகளில் சுமாா் 5 மாதங்களுக்கு பின்னா் கைதிகளை அவா்களது குடும்பத்தினரும், உறவினா்களும் புதன்கிழமை பாா்த்தனா். முகக் கவசம் அணிந்து வந்த பாா்வையாளா்களுக்கு மட்டும் சிறைக்குள் கைதிகளை பாா்க்க அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com