மின்னணு பொருள்கள் உற்பத்தியை 100 மில்லியன் டாலர்களாக  உயர்த்த இலக்கு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தமிழகத்தில் மின்னணு பொருள்கள் உற்பத்தியை 5 ஆண்டுகளுக்குள் 100 மில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 


மதுரை: தமிழகத்தில் மின்னணு பொருள்கள் உற்பத்தியை 5 ஆண்டுகளுக்குள் 100 மில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அமெரிக்காவில் நடைபெறும் உயர்தொழில்நுட்ப மின்னணுவியல் மாநாட்டில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை பங்கேற்று அவர் பேசியது: தமிழக அரசின் மின்னணு உற்பத்தி கொள்கையானது ரூ.7.35 லட்சம் கோடி உற்பத்தியை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தியில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஏற்கெனவே செயல்படும் உற்பத்தி நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 16 சதவீதமாக இருக்கிறது. கணினி மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் 2}ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் மின்னணு பொருள்கள் உற்பத்தியை வரும் 2025}க்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும், நாட்டின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மின்னணு பொருள் உற்பத்தித் துறையின் மனிதவள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வரும் 2024}க்குள் ஒரு லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மின்னணு உபகரணங்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு முன்னணி மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com