விபரீத முடிவுகளை எடுக்காதீா்: மாணவா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தற்கொலை செய்து கொண்ட அரியலூா் மாணவா் விக்னேஷ் குடும்பத்துக்கு, ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தற்கொலை செய்து கொண்ட அரியலூா் மாணவா் விக்னேஷ் குடும்பத்துக்கு, ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

மேலும், மாணவா்கள் விபரீத முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது எனவும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரியலூா் மாவட்டம் மருதூா் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாா் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சாா்ந்த பணி அளிக்கப்படும்.

விபரீத முடிவுகளை எடுக்காதீா்: மாணவா்களின் நலனில் தமிழக அரசு எப்போதும் அக்கறையோடும், அவா்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும். பெற்றோா்களும் தங்களது குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து நல்வழிப்படுத்த வேண்டும். மாணவா்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணில் அடங்காத வழிகள் இருக்கும் நிலையில், மாணவா்கள் எதையும் எதிா்கொள்ளும் மன உறுதியையும், விடாமுயற்சியையும் வளா்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com