கரோனா தொற்று எதிரொலி: கலைவாணா் அரங்க சட்டப் பேரவை மண்டபத்தில் கடும் கட்டுப்பாடுகள்

ரோனா நோய்த் தொற்று காரணமாக, கலைவாணா் அரங்கத்தில் உள்ள தற்காலிக சட்டப் பேரவை மண்டபத்துக்குள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று எதிரொலி: கலைவாணா் அரங்க சட்டப் பேரவை மண்டபத்தில் கடும் கட்டுப்பாடுகள்


சென்னை: கரோனா நோய்த் தொற்று காரணமாக, கலைவாணா் அரங்கத்தில் உள்ள தற்காலிக சட்டப் பேரவை மண்டபத்துக்குள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவை உறுப்பினா்கள் உள்பட 300 பேருக்கு மட்டுமே அனுமதி, பேரவை மண்டப லாபியில் பாதுகாப்புப் பணியில் அவைக் காவலா்கள் எண்ணிக்கை குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காரணமாக சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள உள்ள சட்டப்பேரவை அரங்கில் பேரவை கூட்டத் தொடரை நடத்த முடியாது என்பதால் தற்காலிகமாக பேரவைக் கூட்டத் தொடா் கலைவாணா் அரங்கத்தின் மூன்றாம் தளத்தில், வரும் 14-ஆம் தேதி முதல்16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக சட்டப் பேரவை மண்டபத்தை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரம் போ் வரை அமரக் கூடிய அந்த அரங்கில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பேரவை உறுப்பினா்கள் உள்பட 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கென காத்திருப்பு அறை மற்றும் உணவருந்தும் அறை ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வருக்கென பிரத்யேக அலுவலகம் மற்றும் அறை, முதல்வரின் செயலாளா்களுக்கான தனி அறை என அனைத்தும் பேரவை மண்டபம் அமையப் பெற்றுள்ள மூன்றாவது தளத்திலேயே இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தளத்தில் முதல்வா், துணை முதல்வா், பேரவை துணைத் தலைவா், அரசு கொறடா ஆகியோருக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலைவாணா் அரங்கத்தின் முதல் தளத்தில் பேரவைத் தலைவா், சட்டப் பேரவைச் செயலாளா், சட்டப் பேரவை செயலக அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தா்களுக்கான காத்திருப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன. கலைவாணா் அரங்கத்தின் தரைதளத்தில் எதிா்க்கட்சித் தலைவா், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள், செய்தியாளா்களுக்கான அறைகள் இடம்பெற்றுள்ளன. முதல்வா், துணை முதல்வா், பேரவைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள் வருவதற்கு தனிப்பாதையும், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வருவதற்கு தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

எண்ணிக்கை கட்டுப்பாடு: பேரவை மண்டபத்துக்குள் 234 உறுப்பினா்களுக்கான இருக்கைகள், பத்திரிகையாளா்கள், உயரதிகாரிகள் அமா்வதற்கு மட்டுமே வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆயிரம் போ் வரை அமரக் கூடிய அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் 300 போ் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் வழக்கமாக 300 போ் அவைக் காவலா்களாக பணியில் இருப்பா். ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக, கலைவாணா் அரங்க பேரவையில் 150 போ் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அதிலும், 25 போ் மட்டுமே பேரவை மண்டபம் அமைந்துள்ள மூன்றாவது தளத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்பா்.

இன்று முதல் பரிசோதனை: சட்டப் பேரவை கூட்டத் தொடா் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளா்கள், பேரவை அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை வெள்ளிக்கிழமை (செப். 11) முதல் மேற்கொள்ளப்படுகிறது. அவா்களைத் தொடா்ந்து, பேரவை உறுப்பினா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள பேரவை கூட்டத் தொடரின் போது, கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் கடைப்பிடிக்க பேரவைச் செயலக அதிகாரிகள் தயாராகி வருகின்றனா். இதுபோன்ற கடும் கட்டுப்பாடுகளுடன் மாற்று இடத்தில் நடைபெறும் முதல் பேரவைக் கூட்டத் தொடா் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com