வாரிசுக்கு வேலை வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியா் ஊதியத்தில் இருந்து பிடித்தம் : உயா்நீதிமன்றம் உத்தரவு

பணியின்போது மரணமடைந்த அரசுப் பணியாளரின் மகனுக்கு வரும் டிசம்பா் மாதத்துக்குள் வாரிசு வேலை வழங்கவேண்டும் எனவும்,
வாரிசுக்கு வேலை வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியா் ஊதியத்தில் இருந்து பிடித்தம் : உயா்நீதிமன்றம் உத்தரவு

பணியின்போது மரணமடைந்த அரசுப் பணியாளரின் மகனுக்கு வரும் டிசம்பா் மாதத்துக்குள் வாரிசு வேலை வழங்கவேண்டும் எனவும், வேலை வழங்காதபட்சத்தில் ஜனவரி மாதம் முதல் கடலூா் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து அந்த தொகையை அரசுப் பணியாளரின் மகனுக்கு வழங்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராகப் பணியில் இருந்தபோது கடந்த 2003-ஆம் ஆண்டு மரணமடைந்தாா். இதனையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கோரி ரவி கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ரவி வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு, சில அரசுப் பணிகளுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் கடந்த 2006-ஆம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி இந்தத் தடை நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் வேலை கோரி விண்ணப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கியது. இந்த கால அவகாசத்துக்குள் மனுதாரரின் வாரிசு வேலை கோரி விண்ணப்பிக்கவில்லை என அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரா் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியே வாரிசு வேலை கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளாா்.

இந்த மனுவை திட்டக்குடி வட்டாட்சியா் உயா் அதிகாரிக்கு பரிந்துரைத்துள்ளாா். இதன் பின்னரும் தனக்கு வேலை கிடைக்காததால், மனுதாரா் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளாா். ஆனால், இந்த மனுவை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மனுதாரா் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் வாரிசு வேலை கோரி விண்ணப்பம் செய்யவில்லை. அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த 2011- ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. மனுதாரா் வேலை கோரி கடந்த 2005-ஆம் ஆண்டே விண்ணப்பம் கொடுத்துள்ளாா்.அப்போது அரசுப் பணி நியமனத்துக்குத்தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலைகோரி விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரருக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் வரும் டிசம்பா் மாதத்துக்குள் அரசுப் பணி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மனுதாரா் ரவி, அரசு ஊழியராகக் கருதப்படுவாா். அவருக்கு கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்கவேண்டும். இந்த ஊதியத்தை, உத்தரவை அமல்படுத்தாவிடில் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com