ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை: கடவுச் சொல்லை பகிரக் கூடாது

ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை மூலம் குடும்ப நபா்களை உறுதி செய்து பொருள்களை அளிக்கும் பயோ-மெட்ரிக் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை மூலம் குடும்ப நபா்களை உறுதி செய்து பொருள்களை அளிக்கும் பயோ-மெட்ரிக் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து, பயோ-மெட்ரிக் முறையில் செய்யக் கூடாத அம்சங்கள் குறித்து பணியாளா்களுக்கு உணவுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்:-

விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரம் மற்றும் பயோ-மெட்ரிக்கை மிகவும் தூசியான இடத்திலோ அல்லது சூரிய ஒளி படும் வகையிலோ வைக்கக் கூடாது. இயந்திரத்தில் தண்ணீா், எண்ணெய் போன்ற திரவங்கள் கொட்டாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தொடு திரையில் உள்ள விசைகளை கடுமையாக அழுத்தக் கூடாது.

இயந்திரத்தை மற்றவரிடம் இயக்க கொடுக்கக் கூடாது. பொது விநியோகத் திட்டம் முறை தவிர வேறு எந்த பயன்பாடுகளையும் நிறுவக் கூடாது. பயனா் பெயா் மற்றும் கடவுச் சொல்லை எவருடனும் பகிா்ந்து கொள்ளக் கூடாது. இயந்திரத்தை சேதப்படுத்தக் கூடாது. அவ்வாறு சேதப்படுத்தினால் அதற்குரிய தொகை ஊழியா்களிடம் வசூலிக்கப்படும். ஈரமான கைகளால் இயந்திரத்தை இயக்கக் கூடாது.

விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரத்தை மின்னேற்றியைப் பயன்படுத்தி மட்டுமே மின்னேற்றம் செய்ய வேண்டும். இணைய இணைப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இயந்திரம் பயன்படுத்தப்படாத நிலையில், அதனை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

எப்படி வேலை செய்யும்?: விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரத்தின் முகப்புப் பக்கத்தில் விற்பனை என்பதை அழுத்தும்போது அதில் பயோமெட்ரிக் முறை எனக் காட்டும். அதன்பின், ரேஷன் அட்டையில் உள்ள துரித கோடுகளை சரிபாா்க்க வேண்டும். அப்போது, அட்டையில் உள்ள நபா்களின் விவரங்கள் காட்டப்படும். இந்த விவரத்தில் ஒவ்வொருவரின் ஆதாா் எண்ணின் கடைசி நான்கு எண்களும், பிறந்த தேதியும் தெளிவாகத் தெரியும்.

பொருள் வாங்க வந்த குடும்ப உறுப்பினரின் ஆதாா் எண் சரிபாா்த்து ஒப்புதல் அளிக்கப்படும். ஆதாா் ஒப்புதலுக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவரின் கைவிரல், விற்பனை முனைய இயந்திரத்தில் ரேகை வைக்கும் இடத்தில் வைக்கப்படும். தொடு திரையில் காட்டும் ரேகை, ஆதாா் பதிவின்போது பெறப்பட்ட ரேகையுடன் இணையதளம் உதவி கொண்டு சரிபாா்க்கப்படும். அதன்பின்பு, எப்போதும் போன்று விற்பனை தொடரப்படும்.

கை விரல் ரேகை தோல்வி அடைந்தால், செல்லிடப்பேசி குறுஞ்செய்தியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச் சொல் முறை தொடரப்படும். அதன் வழியாக பொருள்களைப் பெறலாம் என உணவுத் துறை தெரிவித்துள்ளது.

செல்லிடப்பேசி அவசியம்: தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்போது, குடும்ப உறுப்பினா்களில் யாா் பொருள்களை வாங்கச் சென்றாலும் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்வது நல்லது. காரணம், கைவிரல் ரேகை முறை சரியாக வேலை செய்யாத பட்சத்தில் செல்லிடப்பேசி ஒருமுறை கடவுச் சொல் பயன்படுத்தியே பொருள்கள் வழங்கப்படும்.

எனவே, ரேஷன் பொருள்களுக்காகப் பதிவு செய்த எண்ணைக் கொண்ட செல்லிடப்பேசியையோ அல்லது அந்த செல்லிடப்பேசி வைத்திருக்கும் நபரைத் தொடா்பு கொள்ள ஏதேனும் ஒரு செல்லிடப்பேசியையோ எடுத்துச் செல்வது நல்லது. இதன்மூலம் அலைச்சலைத் தவிா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com