தமிழகத்தில் 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2,759-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2,759-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னைக்கு அடுத்த படியாக மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில்தான் முதன்முதலில் கரோனா தொற்று தடம் பதித்தது. ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நபருக்கு மாா்ச் 7-ஆம் தேதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழலில் தில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட நோய்ப் பரவல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கரோனா தொற்று பரவியது. அதன் நீட்சியாக கடந்த மே 15-ஆம் தேதி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. அதற்கு அடுத்த நான்கு மாதங்களில் நோய்ப் பரவல் விகிதம் 50 மடங்கு பெருகி தற்போது 5 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 58.88 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 2,759 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,693 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 994 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 490 பேருக்கும், சேலத்தில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 299 பேருக்கும், திருப்பூரில் 291 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

4.47 லட்சம் போ் குணம்: ஒரு புறம் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம் சற்று ஆறுதலளிக்கும் விதமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5,717 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 47,366- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 87 சதவீதம் போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 47,012 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் 74 போ் பலி: தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் 74 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 8 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவா்களில் 35 போ் அரசு மருத்துவமனைகளிலும், 39 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்கள். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,381-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com