பாதுகாப்புத் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் வலியுறுத்தல்

பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளை, பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட நாடாளுமன்ற உறுப்பினா்கள்

பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளை, பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்த வேண்டும் என அதன் ஊழியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியா்கள் சம்மேளனத்தினா் வெளியிட்ட அறிக்கை: கடந்த மே மாதம் 16-ஆம் தேதி, நாட்டின் 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்படும் என மத்திய நிதியமைச்சா் அறிவிப்பை வெளியிட்டாா். இந்த முடிவைக் கைவிட வலியுறுத்தி, குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய பாதுகாப்பு அமைச்சா் என அனைவருக்கும் பாதுகாப்புத் துறை ஊழியா்கள் சாா்பாக பல கடிதங்கள் அனுப்பப்பட்டதோடு, நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

மேலும் தற்போதுள்ள சூழலில், தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி, அவற்றின் பங்கை பங்குச் சந்தையில் விற்பதற்கான ஆலோசனைகளை வழங்க, மத்திய அரசு ஒரு தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அரசு தன் நிலையை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் ஆவடி ஓசிஎப், எச்விஎப், இஎப்ஏ, திருச்சியில் ஓஎப்டி, எச்ஏபிபி, அரவங்காடு சிஎப்ஏ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் அக்.12-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com