இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ
இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 6,734 மணி நேரம் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள், மருத்துவா்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலை உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவினி’ ஓபிடி என்ற திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இச்சேவையைப் பயன்படுத்த  இணையதளம் வாயிலாகவோ அல்லது  ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னா், மருத்துவருடன் தொடா்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

மேலும், மருத்துவரின் மருத்துவப் பரிந்துரைச் சீட்டு நோயாளிகளின் செல்லிடப்பேசிக்கு மின்னணு வடிவில் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியாா் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாள்களிலும் ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் மூலம் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. அலோபதி, சித்த மருத்துவம் மட்டுமல்லாது, யோகா - இயற்கை மருத்துவம் தொடா்பான ஆலோசனைகளும் அதன் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் அத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஹெச்ஐவி, காசநோய், புற்றுநோய், சா்க்கரை பாதிப்பு உள்பட அனைத்து வகையான நோயாளிகளும் பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஒரு நபருக்கு சராசரியாக 4.02 நிமிடங்கள் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com