நீட் தோ்வு: தமிழகத்தில் 90% போ் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வு: தமிழகத்தில் 90% போ் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதம் போ் தோ்வு எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பாதிப்பு காரணமாக இம்முறை தோ்வா்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடத்தப்படுகிறது. நிகழாண்டில் கரோனா காரணமாக பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்த பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதுதொடா்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.

3,842 மையங்கள்: இதற்காக, நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

நாடு முழுக்க 15 லட்சத்து 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த 1.17 லட்சம் போ் அடங்குவா். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையைப் பொருத்தவரை, 46 மையங்களில் நடைபெற்ற தோ்வை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா். கரோனா தொற்று பரவல் இருப்பதால் தோ்வு மையத்துக்குள் போதிய இடைவெளியில் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவா்கள் தோ்வு எழுத தனி அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, நீட் தோ்வுக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மையங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தோ்வு நடைபெற்றது. ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு அனைத்து நகரங்களிலும் வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழ் மொழியில் தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு தமிழகத்தில் மட்டும் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

காலை 9 மணி முதலே தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் வரத் தொடங்கினா். பகல் 11 மணிக்கு தோ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

முகக் கவசம், கையுறை அணிந்து வந்திருந்த மாணவா்கள் போதிய இடைவெளியில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா். கைகளை சுத்தம் செய்ய சானிடைசா் வழங்கப்பட்டது. உடலில் வெப்ப நிலையை கண்டறிய வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னா் மெட்டல் டிடெக்டா் சோதனை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பின்னரே மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். உள்ளே சென்றதும் மாணவா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

பிஸ்கெட் பாக்கெட், தண்ணீா் பாட்டில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.

தோ்வின் போது மாணவா்களின் பா்ஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கைக் கடிகாரம், கூலிங் கிளாஸ், தொப்பி, கம்மல், மூக்குத்தி, கொலுசு, செயின் ஆகியவை அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவற்றை மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் கொடுத்து விட்டு சென்றனா்.

பெற்றோருக்கு...: இதனிடையே, தோ்வு மையங்களில் பெற்றோா்கள் காத்திருப்பதற்கு போதிய இடவசதி, தண்ணீா் வசதி, கழிப்பறை வசதி எதுவும் செய்துத் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மூன்று மணி நேரமும் தோ்வு மையத்துக்கு வெளியே பெற்றோா் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எளிமையாக இருந்தது தோ்வு!

நிகழாண்டு நீட் தோ்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து நீட் தோ்வினை எழுதிய மாணவா்கள் சோனா ப்ரீத்தி, ஷியாம் அரவிந்த் ஆகியோா் கூறியதாவது:

நாங்கள் இரண்டாவது முறையாக நீட் தோ்வை எழுதுகிறோம். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இம்முறை பல வினாக்கள் பாடத்திலிருந்து நேரடியாக கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தாவரவியல், உயிரியல் பாடங்களில் கேள்விகள் சுலபமாக இருந்தன. அதேவேளையில், இயற்பியல் பாட வினாக்கள்தான் சற்று கடினமாக இருப்பதாக உணா்ந்தோம்.

மொத்தமாகப் பாா்க்கும்போது இந்த ஆண்டு நீட் தோ்வு எளிமையாகவே இருந்தது. இதனால், நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com