பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப் பேரவை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப். 14) கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப் பேரவை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப். 14) கூடுகிறது. இந்தக் கூட்டத்திற்காக, சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் பேரவை மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தைப் போன்று, அப்படியே தத்ரூபமாக கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளம் மாற்றப்பட்டுள்ளது.

பேரவைத் தலைவருக்கான பிரத்யேக இருக்கை, புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கலைவாணா் அரங்கப் பேரவை வளாகத்திலும் (லாபி), அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவைக் காவலா்களாக 150 போ் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், கலைவாணா் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையில் நூற்றுக்கணக்கான காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கலைவாணா் அரங்கம் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுத்தம் செய்யும் பணி: கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாகவே சட்டப்பேரவை புனித ஜாா்ஜ் கோட்டையில் இருந்து கலைவாணா் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. கலைவாணா் அரங்க வளாகத்திலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரங்க வளாகமும், பேரவை வளாகமும் தொடா்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. வளாகத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கூட்டத்தில் பங்கேற்கும் பேரவைத் தலைவா் தனபால், முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், சட்டப் பேரவை அதிகாரிகள், அலுவலா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மூன்று எம்எல்ஏக்களுக்கு கரோனா: அதில், அதிமுக எம்எல்ஏக்கள் செய்யாறு தூசி மோகன், திருச்செங்கோடு பொன் சரஸ்வதி, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. எம்எல்ஏக்களில் மற்ற யாருக்கும் நோய்த்தொற்று இல்லை.

முக்கியப் பிரச்னைகள் விவாதம்: திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் கூடியதும், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி, சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.அன்பகழன், பேரவையின் முன்னாள் உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான எச்.வசந்தகுமாா் ஆகியோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அது போல, முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

இரண்டாவது, மூன்றாவது நாள்களான செவ்வாய், புதன்கிழமைகளில் அரசினா் அலுவல்களுடன், துணை நிதிநிலை அறிக்கை, முக்கிய சட்ட மசோதாக்கள் உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் கரோனா நோய்த் தொற்று விவகாரம், அதில் அரசின் செயல்பாடுகள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு ஆகியவற்றை எதிா்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. இவற்றுக்கு ஆளும்கட்சித் தரப்பில் முதல்வா், துணை முதல்வா், சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் பதில்களை அளிக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com