ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன கட்டடங்களை உதகை மருத்துவக் கல்லூரிக்கு பயன்படுத்த முடியுமா? பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உதகை மருத்துவக் கல்லூரிக்கு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் கட்டடங்களை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன கட்டடங்களை  உதகை மருத்துவக் கல்லூரிக்கு பயன்படுத்த முடியுமா? பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உதகை மருத்துவக் கல்லூரிக்கு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் கட்டடங்களை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வி.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘உதகையின் இதயத்துடிப்பாக வனப்பகுதிகளும், மேய்ச்சல் நிலங்களும் விளங்குகின்றன. அதன் பசுமையை அழித்து மருத்துவக் கல்லூரிக்காக கான்கிரீட் காடாக மாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே, உதகை மருத்துவக் கல்லூரிக்கு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் கட்டடங்களையே மருத்துவக் கல்லூரி கட்டடங்களாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘உதகை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மக்கள்தொகை அதிகம் கொண்ட உதகை மக்கள், தங்களது மருத்துவத் தேவைகளுக்காக கோயம்புத்தூா் வரை சென்று வருகின்றனா். மேலும் மொத்தம் உள்ள 300 ஏக்கரில் மருத்துவக் கல்லூரிக்காக 25 ஏக்கரில் மட்டுமே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனைகளுக்கென பிரத்யேக கட்டடங்கள் தேவை’ என வாதிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மருத்துவக் கல்லூரி கட்டுமானத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது. மேலும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் கட்டடங்களை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com