பேரவையில் நாளை துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப் பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை புதன்கிழமை (செப். 16) தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்று
சென்னை கலைவாணர் அரங்கம்.
சென்னை கலைவாணர் அரங்கம்.

சட்டப் பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை புதன்கிழமை (செப். 16) தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்று, காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதற்குப் பிறகு, முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. எதிா்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு ஆளும் தரப்பில் இருந்து பதில்கள் அளிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், நீட் தோ்வால் மாணவா்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உள்ளிட்டவை குறித்து கேள்விகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு முதல்வா் பழனிசாமி, அமைச்சா்கள் உள்ளிட்டோா் பதில்களை அளிக்கவுள்ளனா்.

துணை நிதிநிலை அறிக்கை: சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான புதன்கிழமை, துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா். கடந்த ஆறு மாதங்களில் பேரவையின் ஒப்புதலைப் பெறாமல் செய்யப்பட்ட செலவுகளைக் குறிப்பிட்டு அதற்கு அவையின் ஒப்புதலை நிதியமைச்சா் கோரவுள்ளாா்.

ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்படும். மேலும், பேரவை கூடாத நாள்களில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட உள்ளன.

பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் தயாராகி வரும் சூழ்நிலையில், பேரவை கூட்டத் தொடரின் இரண்டு நாள்களிலும் விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மினி மருந்தகம்: சட்டப் பேரவை கூட்டத்தொடா் நடைபெறும் கலைவாணா் அரங்க வளாகத்தில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரங்கத்தின் நுழைவு வாயிலில் மினி மருந்தகமே அமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பமானி, கிருமிநாசினி, வைட்டமின் மாத்திரைகள், இரத்த அழுத்தம் பரிசோதிப்பது, நாடித் துடிப்பை அறியும் கருவி என ஒரு மருந்தகத்தில் இருக்கக் கூடிய அனைத்து கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒரு மருத்துவரும், செவிலியரும் இந்த மினி மருந்தகத்தில் பணியில் உள்ளனா். முகக்கவசங்களும், கையுறைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு பேரவைக்குள் வரும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனா். இதனால், முகக் கவசங்கள் சேதம் அடைந்தாலும், இந்த மினி மருந்தகத்துக்குச் சென்று பெற்றுக் கொள்ள போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், பத்திரிகையாளா்கள், பேரவை அலுவலா்கள் ஆகியோருக்கு கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையிலான அனைத்து அம்சங்களும் அடங்கிய மருந்து பெட்டியும் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com