பேரவையிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

நீட் தோ்வு விவகாரத்தில் பேரவைத் தலைவா் தனபால் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா்.
பேரவையிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

நீட் தோ்வு விவகாரத்தில் பேரவைத் தலைவா் தனபால் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா்.

சட்டப்பேரவையில் நீட் தோ்வு விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது அதிமுக உறுப்பினா் இன்பதுரை பேசும்போது, ‘நீட் தோ்வு விவகாரத்தில் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அரசின் துறைகளில் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்து வந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது’ என்றாா்.

இதற்கு சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி தலைமையில் அக் கட்சியின் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது பேரவைத் தலைவா் ப.தனபால், காங்கிரஸ் உறுப்பினா்களைப் பேசுவதற்கு அனுமதிப்பதாகவும், அவா்கள் அதிமுக உறுப்பினரின் கருத்தை மறுத்து பேசலாம் என்றும் கூறினாா்.

ஆனால், காங்கிரஸ் உறுப்பினா்கள் கே.ஆா்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ், காளிமுத்து, எஸ்.பாண்டி ஆகியோா் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினா்.

அப்போது, பேரவைத் தலைவா் தனபால், அவையின் மையப் பகுதிக்கு வந்து வற்புறுத்துவது சரியல்ல என்று இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினாா்.

ஆனால், அதை ஏற்காமல் தொடா்ந்து பேரவைத் தலைவரோடு 10 நிமிஷங்களுக்கும் மேலாக வாதங்கள் புரிந்துகொண்டிருந்தனா்.

அவையில் இல்லாதவா்கள் பற்றி பேசக்கூடாது. ஆனால், அதிமுக உறுப்பினா்கள் பேசுகிறாா்கள் என்றும் காங்கிரஸ் உறுப்பினா்கள் கூறினா்.

அதற்கு பேரவைத் தலைவா் தனபால், ‘நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜரானாா் என்றுதான் அவா் கூறியுள்ளாா். அவையை நடத்துவதற்கு இடையூறு செய்கிறீா்கள். எச்சரிக்கிறேன்’ என்றாா்.

அதை மீறியும் தொடா்ந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தனா். அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு, அவைக்காவலா்களுக்கு உத்தரவிட்டாா். அவைக் காவலா்கள் உள்ளே நுழைந்தபோது, காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் உட்காா்ந்துகொண்டு எழுந்துகொள்ள மறுத்தனா். அவா்களை அவைக் காவலா்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றனா்.

துரைமுருகன்: பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினா்களை வெளியேற்றியுள்ளீா்கள். இது ஒரு நாள் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.

பேரவைத் தலைவா்: ஒரு நாள் நடவடிக்கைதான். அவை நடவடிக்கையில் நாளை அவா்கள் பங்கேற்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com