அலைக்கழிக்கப்படும் கரோனா நோயாளிகள்: அரசு மருத்துவமனைகளில் தாமதமாகும் சிகிச்சை

தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளை நாடி வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்காமல், கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்க வைத்து
அலைக்கழிக்கப்படும் கரோனா நோயாளிகள்: அரசு மருத்துவமனைகளில் தாமதமாகும் சிகிச்சை

தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளை நாடி வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்காமல், கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்க வைத்து அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு பலர் தள்ளப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுகாதார வழிகாட்டு நெறிமுறைப்படி, ஆர்டி-பிசிஆர் எனப்படும் பரிசோதனைகள் வாயிலாகவே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒருவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வுக்குட்படுத்தப்படுவதே பிசிஆர் பரிசோதனை எனப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள 170 ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிசிஆர் பரிசோதனையில் சளி மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்த குறைந்தது 4-இலிருந்து 6 மணி நேரம் வரை ஆகும். நாள்தோறும் 80 ஆயிரம் மாதிரிகள் தமிழகத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்படுவதால், அதன் முடிவுகள் வெளியாக இரண்டு நாள்கள் வரை ஆகின்றன.
இதில் சிக்கல் என்னவென்றால், கரோனா தொற்றுக்குள்ளான பெரும்பாலானோர் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தீவிர பாதிப்புக்கு ஆளாகி விடுகின்றனர். குறிப்பாக நுரையீரலில் அதிக அளவில் தொற்று பரவுவதால், அதீத மூச்சுத் திணறல், நுரையீரல் செயலிழப்பால் பலர் பாதிக்க நேரிடுகிறது. ஆனால், அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ ஆர்டி பிசிஆர் பரிசோதனையைக் காரணம் காட்டி காலம் தாழ்த்துவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. 
இதனிடையே, நெஞ்சகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சிடி ஸ்கேன் பரிசோதனையானது கரோனாவைக் கண்டறியவும், நுரையீரல் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறியவும் பெரிதும் உதவுவதால், பல மருத்துவர்கள் பிசிஆர் ஆய்வுக்கு முன்பாக சிடி ஸ்கேன் பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர்.
அதில் 50 சதவீதத்துக்கும் மேல் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நோயாளியை கரோனா பாதித்த நபராகக் கருதி சிகிச்சையளிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
ஆனால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை சிடி ஸ்கேனில் 70 சதவீதத்துக்கும் மேல் நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் எவரையும் உள்நோயாளியாக அனுமதிப்பதில்லை என்ற முடிவில் உள்ளன. இது கரோனா உயிரிழப்பை அதிகரிக்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நோய்த்தொற்று சிகிச்சை நிபுணர்கள் சிலர் கூறியதாவது:
கரோனா தொற்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ஓரிரு நாள்களிலேயே நுரையீரலில் தொற்று தீவிரமடைந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, நமது உடல்நிலையைக் கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் தொடர்ந்து ரத்த ஆக்சிஜன் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அந்த அளவு 94 சதவீதத்துக்கு கீழ் குறைந்தாலோ அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.
இதுபோன்ற அவசர சிகிச்சைக்காக வரும் எவரையும் அலைக்கழிப்பது ஆபத்தானது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு இத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கலாம். பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வந்து, அதில் நோய்த்தொற்று உறுதியானால் கரோனா வார்டுகளுக்கு அவர்களை மாற்றலாம். மாறாக, பரிசோதனை முடிவுகள் வரும் வரை ஒருவருக்கு சிகிச்சையளிக்க மறுப்பது ஏற்புடையதல்ல.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கான தனி வார்டுகள் உள்ளன. அதேவேளையில், மாநிலம் முழுவதும் பரவலாக அத்தகைய வசதி இல்லை. அதுபோன்ற வசதிகளையும் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, அண்மைக் காலமாக அரசு மருத்துவமனைகளில் கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனைக் குறைப்பதற்காகக்கூட, அங்கு ஆபத்தான நிலையில் வருபவர்களை அனுமதிக்காமல் இருக்கலாம். எது எவ்வாறாயினும், கரோனா விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் சமூகப் பிழையாக உருவெடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள்:
இதுவரை 59.68 லட்சம்
நாள்தோறும் சராசரி 80 ஆயிரம்
பிசிஆர் உபகரணங்கள் 
கொள்முதல் 80 லட்சம்
ஆய்வகங்கள்:
தனியார் 105
அரசு 65
மொத்தம் 170

அனுமதிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்!
தீவிர மூச்சுத்திணறல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்தால் உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் கரோனா உறுதி செய்யப்படாமல், அதற்கான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிக வசதிகளுடன் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ஏதாவது ஓரிரு இடங்களில் கரோனா பரிசோதனை முடிவுகளைக் காரணம் காட்டி நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தால், 104 என்ற எண்ணில் அரசுக்கு புகார் அளிக்கலாம். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு வார்டு
கரோனா காலத்தில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான மருத்துவச் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கரோனா அறிகுறிகளுடன் தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கென சிறப்பு வார்டுகள் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. சராசரியாக 10 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதியுடன் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது தாலுகா மருத்துவமனைகளிலும் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பரிசோதனை முடிவுகளுக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com