மலை வளத்தை அழிக்கும் குச்சிகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருள்கள்! அரசு உதவியை எதிர்நோக்கும் பழங்குடிப் பெண்கள்

மலையின் வளத்தை அழிக்கும் உண்ணிச் செடியின் குச்சிகளைக் கொண்டு பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் மலைவாழ் பழங்குடியினப் பெண்கள்,
மலை வளத்தை அழிக்கும் குச்சிகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருள்கள்! அரசு உதவியை எதிர்நோக்கும் பழங்குடிப் பெண்கள்

மலையின் வளத்தை அழிக்கும் உண்ணிச் செடியின் குச்சிகளைக் கொண்டு பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் மலைவாழ் பழங்குடியினப் பெண்கள், அதை மேலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைய அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
 மேற்குத் தொடர்ச்சி மலையில் சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை மாவட்டப் பகுதியில் வனங்களின் செழிப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது லான்டனா என்ற உண்ணிச் செடி. சமவெளிப் பகுதியில் பார்த்தீனியம் செடி ஏற்படுத்தும் பாதிப்புகளை இந்தச் செடிகள் வனங்களில் ஏற்படுத்துகின்றன. வனங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இந்தச் செடிகளால், வன விலங்குகளுக்கான பசுந்தீவனம் அழிந்து வருகிறது. இந்தச் செடியை அழிக்க வனத் துறையினர் போராடி வருகின்றனர்.
 இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டம், பர்கூர் வனச் சரகம் தாமரைக்கரை மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் உண்ணிச் செடி குச்சிகளில் இருந்து பல்வேறு விதமான நாற்காலிகள், கட்டில்கள், புத்தக அலமாரி போன்றவற்றை தயார் செய்ய கற்றுக் கொண்டுள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 15 பெண்கள் விவசாயப் பணி இல்லாத ஓய்வு நேரங்களில் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
 இது குறித்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தாமரைக்கரையைச் சேர்ந்த சித்ரா கூறியதாவது: சுமார் 15 பெண்கள் ஓராண்டுக்கு முன்னர் இப்பயிற்சியைப் பெற்றோம். பழங்குடி மக்கள் சங்கம் ஏற்பாட்டில் கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் உண்ணிச் செடியில் இருந்து பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தன்னார்வ அமைப்பு எங்களுக்கு 2 மாதங்கள் பயிற்சி அளித்தது. இப்பயிற்சியில் பொருள்கள் தயாரிக்க ஓரளவு கற்றுக்கொண்டோம்.
 விவசாய கூலி வேலை இல்லாதபோது இப்பணிகளைச் செய்து வருகிறோம். கடந்த ஓராண்டில் பல்வேறு விதமான இருக்கைகள், கட்டில், புத்தக அலமாரி போன்ற சுமார் 10 வகையான பொருள்களைத் தயார் செய்து வைத்துள்ளோம். இன்னும் விற்பனை செய்யவில்லை. எங்களுடைய முயற்சியை அறிந்த ஈரோட்டைச் சேர்ந்த சிறகுகள் என்ற தன்னார்வ அமைப்பு மரக்கன்றுகளுக்கு கூண்டு செய்து கொடுக்க கேட்டுக் கொண்டது.
 உண்ணிக் குச்சிகளை வளைத்து இரும்பு வளையம் போன்றே கூண்டு செய்து கொடுத்துள்ளோம். ஒரு கூண்டு ரூ. 120 என்ற விலையில் 100 கூண்டுகளை அந்த அமைப்பு எங்களிடம் இருந்து வாங்கிச் சென்றுள்ளது.
 நுணுக்கங்களை அறிந்துகொள்ள மேலும் சில நாள்கள் பயிற்சியும், வனப் பகுதிகளில் இருந்து எளிதாக உண்ணிச் செடிகளை எடுத்து வரவும், பொருளாதார உதவியும் இருந்தால், இதனை முழு நேர தொழிலாகச் செய்து கட்டாயம் சாதிப்போம் என்றார்.

அரசு உதவ வேண்டும்
 பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வனம் சார்ந்த வளங்களின் மூலம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியைக் கடந்த கால் நூற்றாண்டு காலமாக பர்கூர் வனப் பகுதியில் முன்னெடுத்து வரும் வி.பி.குணசேகரன் கூறியதாவது: பர்கூர் வனப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம். மழைக் காலம், அதற்குப் பிந்தைய 3 மாதம் என மொத்தம் 6 மாதங்கள் மட்டுமே விவசாயப் பணிகள் இருக்கும். மற்ற நாள்களில் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக சமவெளியை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான், பழங்குடியினப் பெண்களின் வாழ்வாரத்துக்கு உண்ணிச் செடிகளில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்க கற்றுக் கொடுத்துள்ளோம். வெட்டப்பட்ட உண்ணிச் செடி குச்சிகளை வெந்நீர் மூலம் நெகிழ்வாக்கி, பின்னர் நாற்காலி, தேநீர் மேஜை தயாரிப்புக்கு ஏற்ப வளைத்து, ஆணிகளால் இணைத்து வார்னிஷ் அடித்து உலர வைத்தால் பிளாஸ்டிக், மூங்கில், பிரம்புக்கு மாற்றான பல்வேறு விதமான இருக்கைகள், கட்டில்கள் போன்றவற்றைத் தயாரிக்க முடியும். இதில் இருந்து பென்சில், பொத்தான், கைத்தடி, குடை, போட்டோ ஃபிரேம் உள்ளிட்ட பொருள்களையும் தயாரிக்கலாம்.
 பழங்குடியின மக்கள் சங்கம் இயன்ற அளவு பயிற்சி அளித்துள்ளது. கிடைத்த பயிற்சியைக் கொண்டு தொடர் முயற்சிகள் மூலமாக 5 விதமான இருக்கைகள், கட்டில், புத்தக அலமாரி போன்றவற்றை இந்தப் பெண்கள் தயாரித்துள்ளனர். இந்தப் பொருள்கள் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை. முழுமையான தரத்தை உறுதி செய்த பிறகு, விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். மரக்கன்றுகளுக்கான 100 கூண்டுகளைத் தயாரித்து விற்பனை செய்துள்ள நிலையில், இப்போது முக்காலி போன்று சிறிய இருக்கைகள் 100 எண்ணிக்கையில் தயாரிக்க ஆர்டர் கிடைத்துள்ளது. அதனை இப்போது தயார் செய்து வருகின்றனர்.
 பழங்குடி மக்கள் சங்கம் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சியும், ஆர்வமும்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை படிப்படியாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது. நுணுக்கங்களை அறிந்துகொள்ள மேலும் சில நாள்களுக்குப் பயிற்சி கட்டாயம் தேவைப்படும். அதற்கான வாய்ப்பையும், வட்டியில்லா வங்கிக் கடனுதவி, மானியம், பர்கூர் அல்லது தாமரைக்கரையில் விற்பனை மையத்தை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.
 -கே.விஜயபாஸ்கர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com