அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிப்பு: சட்ட மசோதா நிறைவேறியது

தேசிய அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிப்பு: சட்ட மசோதா நிறைவேறியது

சென்னை: தேசிய அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. 
சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.  மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொறியியல், தொழில்நுட்பம், அவை தொடர்பான அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும், அவற்றில் ஆராய்ச்சிகளைத் தொடர்வதிலும் முன்னேற்ற வழிமுறைகளைக் காண்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகமானது 13 உறுப்புக் கல்லூரிகள், கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்துத் துறைகள், குரோம்பேட்டையிலுள்ள தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகள், கல்வி நிறுவநங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
அரசு முடிவு: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வகித்து வருவது பல்கலைக்கழகத்தின் அதிக நேரத்தையும் ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது. இணைப்புப் பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காகவும் புதிய இணைவு வகை பல்கலைக்கழகத்தை தோற்றுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது இணைவு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டு செயல்படும். இப்போதுள்ள பல்கலைக்கழகமானது, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாற்றியமைக்க அரசு தீர்மானித்துள்ளது என சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டப் பேரவையில் நிறைவேறியது.
42 ஆண்டுகால வரலாறு: தேசிய அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது. சென்னையில் செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக்கழகமானது கடந்த 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் நினைவாக இந்தப் பெயரை அப்போதைய அதிமுக அரசு சூட்டியது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை.
கிண்டி பொறியியல் கல்லூரி 1794-ஆம் ஆண்டும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி 1944-ஆம் ஆண்டும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி 1949-ஆம் ஆண்டும், கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் கல்வி நிறுவனம் 1957-ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகமானது 189 ஏக்கரில் பரந்து விரிந்து கட்டடங்களும், பசுமை நிறைந்த மரங்களுடனும் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும், மூன்றாவது வளாகம் தரமணியிலும் செயல்ப்டடு வருகிறது. 
பிரிவும் சேர்ப்பும்...: தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் 2001-ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதன்பின்பு, 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மண்டல வாரியாக புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 2012-ஆம் ஆண்டில் ஒரே பல்கலைக்கழகமாக மீண்டும் உருவாக்கப்பட்டது.
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் 593 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.   கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இப்போது அதே அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டு புதியதொரு பல்கலைக்கழகமாக உருவெடுக்கப் போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com