வண்டலூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

வண்டலூரில் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
வண்டலூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
வண்டலூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி


சென்னை: வண்டலூரில் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மற்றும் பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

மேலும், 30 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் புறவழிச்சாலையை திறந்து வைத்து, 108 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 “யூ” வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பெரிய தெற்கத்தியச் சாலையில் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும் என்று பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை 45-ல் வண்டலூர் - கேளம்பாக்கம் - மாம்பாக்கம் சாலை இணையும் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கடந்த 2011-12ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கையின் போது, சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூர் சாலை சந்திப்பு, சந்தை சாலை சந்திப்பில் ஓர் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, இளையனார் குப்பத்தில் பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக 23 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்குவழி உயர்மட்டப் பாலம் மற்றும் புதுப்பட்டினம் புறவழிச்சாலை; கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டுவில், விக்கிரவாண்டி – கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் வேப்பூர் வட்டம், காட்டுமயிலூரில் காட்டுமயிலூர் - கொங்கராம்பாளையம் சாலையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ரோட்டுப்புதூரில், கள்ளிமந்தயம் - ஓடைப்பட்டி சாலையில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 165 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், புறவழிச்சாலை, பாலங்கள், உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

ரிப்பன் வெட்டி வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து, மாநகரப் பேருந்துகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் சென்றன. அவ்வழியாக மாநகரப் பேருந்துப் போக்குவரத்தையும் முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

சென்னைப் புறநகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 6 வழிப்பாதைகளைக் கொண்ட வண்டலூர் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதால், கேளம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com