நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் குறித்து விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் குறித்து விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் மோதிலால் ஆகியோர்  தற்கொலை செய்து கொண்டனர். 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா, நீதிமன்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம்.  இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட வேண்டும் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கூட்டாக ஒரு கடிதம்
எழுதினர். 

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியமத்தின் கடிதத்தை கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடிதத்தை ஆய்வு செய்த தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவை இல்லை. கரோனா நோய்த் தொற்று பேரிடர் காலத்திலும் நீதிபதிகள் அர்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். காணொலி காட்சி மூலமாக இதுவரை 42 ஆயிரத்து 233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுபோன்று அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றி வரும் சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பொதுவாக தனி நபர்கள் தகவல்களை சரி பார்த்த பின்னரே பொதுத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் அது தவறான கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் நியாயமான விமர்சனத்தை உள்ளடக்கியது தான்.  நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது,  குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும் கரோனா நோய்த் தொற்று காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாத  நடிகர் சூர்யாவின் விமர்சனம் தேவையற்ற ஒன்று என அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com