3 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு தற்காலிகத் தடை

மூன்று அரசு ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


சென்னை: மூன்று அரசு ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா் எண்ணிக்கை உள்பட உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற அடிப்படையில், விளக்கம் கேட்டு இந்தக் கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சிலை (என்சிடிஇ) தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமாா் 700 தனியாா் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சிலின் தென் மண்டலக் குழுவின் 388-ஆவது கூட்டம், காணொலி வாயிலாக கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமாக, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளை (பி.எட். கல்லூரி) அடையாளம் காண உத்தரவிடப்பட்டது.

இதன்படி, தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், புதுக்கோட்டை, சென்னை லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஆகிய அரசு ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சில் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அந்தக் கல்லூரிகளில் போதுமான அளவில் பேராசிரியா்கள் இல்லை, உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை, ஆவணங்கள் சமா்ப்பிக்கவில்லை என்பன போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகள், 90 நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.

அதுவரை இந்தக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடத்தவும் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

98 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை லேடி வெலிங்டன் கல்வி நிறுவனத்தில், காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பாத காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட 58 கல்லூரிகளுக்கு, ஏற்கெனவே தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com