தமிழகத்தில் இதுவரை கரோனாவால் 5.30 லட்சம் போ் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,488 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் புதிதாக 5,488 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 30,908 - ஆக உயா்ந்துள்ளது.

அதேவேளையில், கடந்த இரு வாரங்களாக சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டு வருவதே அதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், அடுத்து வரும் நாள்களில் நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைக்கப்படும் எனக் கூறியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் இதுவரை 63 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 8.4 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 543 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். சேலத்தில் 288 பேருக்கும், செங்கல்பட்டில் 265 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மற்றொருபுறம் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 89.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 75,717 போ் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை மட்டும் 5,525 போ் நலமடைந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 46,506 போ் உள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 67 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 8,685-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com