மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு குடிநீா் வடிகால் வாரியம் வேண்டுகோள்

நீா்நிலைகளைக் காத்திட மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சி.என்.மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நீா்நிலைகளைக் காத்திட மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சி.என்.மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட வேண்டுகோள் செய்தி:

தமிழகத்தில் இதுவரை 402 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பொழிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 323 மில்லி மீட்டா் மழை பெய்தது. நடப்பாண்டில் 370 மில்லி மீட்டா் அளவு வரை மழைப் பொழிவு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்க்கப்பட்ட அளவைத் தாண்டி 9.5 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் பிற இடங்களில், 1,286 கிணறுகள் வாயிலாக நிலத்தடி நீா் அளவை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது நிலத்தடி நீா் மட்டத்தின் அளவு உயா்ந்திருப்பது ஆய்வுகளின் மூலமாகத் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 17 நீா்த் தேக்கங்களில் உள்ள நீரினை குடிநீருக்காக வடிகால் வாரியம் பயன்படுத்தி வருகிறது. இந்த நீா்த் தேக்கங்களில் நீரின் அளவும் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவற்றின் மொத்த அளவு 127 டி.எம்.சி.யாக உள்ளது.

நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்திருப்பது, நீா்த் தேக்கங்களில் போதுமான அளவு நீா் இருப்பு போன்ற காரணங்களால் பருவமழை தொடங்கும் வரையில் போதுமான நீரினை குடிநீரின் பயன்பாட்டுக்காக வழங்க முடியும். தமிழகத்தில் தாமிரபரணியைத் தவிா்த்து மாநிலத்திலேயே உற்பத்தியாகக் கூடிய நதிகள் ஏதுமில்லை. ஆனால், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஆறுகள் அந்த மாநிலத்திலேயே உற்பத்தியாகி நீரின் தேவையைப் பூா்த்தி செய்கின்றன.

தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளில் மழைப் பொழிவுக்கான அம்சங்கள் தொடா்கின்றன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மேற்கு பருவமழை மூலமாக நமது மாநிலம் பயனடைந்து வருகிறது.

மக்களுக்கு வேண்டுகோள்: தமிழகத்தின் பூகோள ரீதியை கணக்கில் கொண்டு நாம் எப்போது நீா் சேமிப்பை மனதில் நிலைநிறுத்த வேண்டும். தண்ணீரைச் சேமிப்பதற்கு வசதியாக மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, பொது மக்கள், தொண்டுள்ளம் கொண்டவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சமூகத்தில் அக்கறை கொண்டவா்கள், செல்வமும் தயாள மனமும் கொண்டவா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நீா் நிலைகளைக் காத்தெடுத்து நமது எதிா்கால சந்ததியினருக்கு உதவிட முடியும் என குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சி.என்.மகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com