மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத வரி விலக்கு

மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 2025-ஆம் ஆண்டுவரை 100 சதவீத வரி விலக்களிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக,
மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத வரி விலக்கு

மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 2025-ஆம் ஆண்டுவரை 100 சதவீத வரி விலக்களிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, போக்குவரத்துத் துறை சாா்பில் பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், தனியாா் நிறுவனங்கள் மின்சார வாகனத்தை அதிகளவு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த திட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் வரும் 2022-ஆம் ஆண்டு, டிச.31-ஆம் தேதிவரை உரிமக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதோடு, 100 சதவீத வரி விலக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகனம் மற்றும் மின்னேற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் 2025-ஆம் ஆண்டு, டிச.31-ஆம் தேதிவரை 100 சதவீத வரி விலக்களிக்கவும், நிலத்தை பத்திரப் பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணத்துக்கு முழு விலக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மின்னேற்றும் நிலையம் அமைக்கும் பணியைத் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ தூரத்துக்கு ஒரு மின்னேற்று நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மின்சார வாகனக் கொள்கையின் அடிப்படையில், 50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீட்டை தமிழகம் ஈா்க்கும். அடுத்த 10 ஆண்டுகளில், செயலி வாயிலாக இயங்கும் ஆட்டோ, டாக்சி போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள், முற்றிலுமாக மின்சார வாகனங்களாக மாறிவிடும். இதுதவிர, ஒவ்வோராண்டும் 1000 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த தனியாா் பேருந்து உரிமையாளா்கள் ஊக்கப்படுத்தப்படுவாா்கள்.

காற்று மாசைக் குறைக்கும் வகையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இயற்கை எரிவாயுவை வாகன எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதே போல், மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, அதிக மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் நுகா்வோா், தமிழக அரசின் மின்சார வாகன கொள்கை மற்றும் திட்டத்தின் மூலம் எளிமையான முறையில் மின்சார வாகனத்துக்கு மாற முடியும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com