தமிழகத்தில் பாஜக - வளர்ச்சியா? வீக்கமா?

வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக தமிழகத்தில் அதன் தடத்தைப் பதிக்க அதிகமாகவே முயற்சிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் பாஜக - வளர்ச்சியா? வீக்கமா?

வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜக தமிழகத்தில் அதன் தடத்தைப் பதிக்க அதிகமாகவே முயற்சிக்க வேண்டியுள்ளது. மத்தியில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக, மற்ற மாநிலங்களில் காங்கிரûஸயும், சில மாநில கட்சிகளையும் எதிர்த்த நிலையில், தமிழகத்தில் தனது சித்தாந்தத்துக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சிகளை எதிர்கொள்கிறது.
 இங்கு காலூன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அந்தக் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகப் பெரிய "டிரேட் மார்க்'காக உள்ளார். அவரை வைத்து இளைஞர்களிடம் கட்சியைக் கொண்டுசெல்லும் முயற்சிக்கு ஓரளவு ஆதரவு இருப்பதையும் காண முடிகிறது. கடுமையான எதிர்ப்பும் உருவாகி இருக்கிறது.
 பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது அந்தப் பிரிவு மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற பிம்பத்தை உடைத்ததுடன், பாஜக மீதான தவறான எண்ணத்தை உடைக்க சிறிது உதவுகிறது. அதுவே, பாஜக குறித்த எதிரான மனநிலையை மாற்றி, அந்தக் கட்சியை ஏற்கும் நிலையை உருவாக்கி இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.
 செப்.17-ஆம் தேதி தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாக்களில் இந்த முறை பெரிய மாற்றம் காணப்பட்டது. தமிழகத்தில் ஆளும்கட்சிகளின் தலைவர்களின் பிறந்த நாளுக்கு மட்டுமே பத்திரிகைகள், ஊடகங்களில் அதிக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மோடியின் பிறந்த நாளுக்கான விளம்பரமும் அதற்கு சளைத்ததல்ல என்ற வகையில் இருந்தது. இதன்மூலம் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைவது போன்ற தோற்றம் தென்படுகிறது. ஆனால், இது உண்மையான வளர்ச்சியா, அல்லது மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் கிடைக்கும் ஆதரவா என்பதை இப்போதே கணித்துவிட முடியாது.
 தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பாஜகவிடம் 55 மாவட்டங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான மாவட்டங்களில் மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு இப்போது மாவட்டத் தலைவர் மற்றும் பிற அணிகள், பிரிவுகளின் தலைவர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர்கள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதுகின்றனர். இதன் விளைவையும் பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது காண முடிந்தது. ஒவ்வோர் அணியினரும், பிரிவினரும் தனித் தனியாக நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அவர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை. இது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல பாஜகவையும் கோஷ்டிப் பூசல் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.
 கொள்கை அடிப்படையிலான கட்சி என்பதிலிருந்து பாஜக தடம் புரண்டு வருவது நன்றாகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியைப் போலவே, மத்திய அமைச்சர்களின் நலன் விரும்பிகள் பலர் ஆங்காங்கே உருவாகி, கட்சியிலும் பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இடைத்தரகர்களாக மாறி கோடிகள் சேர்த்திருப்பதாகக் கட்சித் தொண்டர்களே முணுமுணுக்கிறார்கள்.
 பாஜகவில் புதிதாகச் சேர்பவர்கள், பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கு கட்சியின் கொள்கை, சித்தாந்தம், நோக்கம் ஆகியவை குறித்து பயிற்சி அளிப்பது வழக்கம். ஒருநாள், 3 நாள்கள், ஒரு வாரம் என்ற வகையில் அந்தப் பயிற்சி அளிக்கப்படும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்தப் பயிற்சி ஏதும் வழங்கப்படவில்லை.
 கடந்த காலங்களில் கட்சியின் பதவிகள் குறித்த நியமனம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் விலகல், இறப்பு போன்ற காரணங்களால் காலியான பதவிகளுக்கு அவ்வப்போது அறிவிப்பு வெளிவரும். ஆனால், தற்போது தினந்தோறும் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்புகள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கே தெரிவதில்லை. இதனால், யார் புதிய நிர்வாகிகள் என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.
 "மிஸ்டு கால்' மூலம் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பாஜகவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விசித்திரமான அணுகுமுறை. கடந்த காலங்களில் கிராமம், வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அந்தப் பட்டியல் சம்பந்தப்பட்ட நிர்வாக ரீதியான அமைப்பினரது கையில் இருக்கும். தற்போது எந்த நகரத்தில் எத்தனை பேர் உறுப்பினர் என்ற விவரம் எந்த நகரத் தலைவரிடமும் இருப்பதில்லை. "மிஸ்டு கால்' கொடுத்து கட்சியில் சேர்ந்துவிட்டதாக சிலர் கூறிக் கொண்டு தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கட்சியின் உறுப்பினர் யார் என்பதைக் கூட நிர்வாகிகளால் தெரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
 பாஜக மத அடிப்படையிலான கட்சி என்பது போய், ஜாதிகளைக் குறிவைத்து வளரும் கட்சியாக மாறி வருகிறது.
 தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலமாக செல்வாக்கு பெற்றுத் திகழும் ஜாதியினரிடம் பாஜகவுக்கான செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும், முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் பாஜகவின் தற்போதைய நிலை வளர்ச்சியா அல்லது வெறும் வீக்கமா என்பது விரைவில் வர உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில்தான் தெரியும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com