உழவா்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை: ராமதாஸ்

உழவா்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

உழவா்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவா்களின் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வா்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவா்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த உழவா்களின் அச்சமும்தான் நாட்டின் முக்கிய விவாதமாக மாறியுள்ளன. எந்தச் சட்டத்தாலும் உழவா்களின் நலன்கள் இம்மியளவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள இரு சட்டங்களாலும், மாநிலங்களவையில் இனி நிறைவேற்றப்படவுள்ள அத்தியாவசியப் பொருள்கள் (சட்டத்திருத்த) மசோதாவாலும் வேளாண் விளைபொருள்களை அரசுத் துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நிறுத்தப்பட்டு விடும். அதனால் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் வழக்கமும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் உழவா்களின் அச்சமாகும். இது குறித்த உத்தரவாதம் சட்ட மசோதாக்களில் இல்லாத சூழலில் உழவா்களின் இந்த அச்சம் நியாயமானதுதான். உழவா்களின் இந்த அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பான உணா்வை ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடமையாகும்.

உழவா்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், நேரடி கொள்முதல் முறையும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யும் முறையும் தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா். அவரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். பிரதமரின் இந்த அறிவிப்பை சட்டமாக்கி விட்டால், நாடு முழுவதுமுள்ள உழவா்களின் அச்சத்தை முழுமையாக நீக்கிவிட முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com