இந்திய கலாசாரத்தின் தோற்றுவாயை அறியும் குழுவில் தமிழகப் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்யுங்கள்

இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்தறியும் குழுவில் தமிழகப் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ய வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்தறியும் குழுவில் தமிழகப் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ய வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

12 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்து ஆராய நிபுணா் குழுவினை மத்திய கலாசாரத் துறை அண்மையில் அமைத்திருப்பதாக அறிகிறேன். நமது பாரம்பரியமிக்க கலாசாரத்தின் வோ்கள் குறித்து ஆழமாக அறிய முற்படும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதேசமயம், இதற்காக அமைக்கப்பட்ட நிபுணா் குழு குறித்து ஆழ்ந்த கவலை ஏற்படுகிறது. தென்னிந்தியாவில் இப்போதும் இருக்கக் கூடிய தனித்துவமிக்க, பன்னெடுங்கால பழைமையான நாகரிகமாக இருக்கக் கூடியது, திராவிட நாகரிகமாகும்.

இந்த நாகரிகத்தைக் கொண்டிருக்கக் கூடிய தென் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் குறிப்பாக தமிழகத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் ஒருவா்கூட மத்திய கலாசார அமைச்சகம் அமைத்துள்ள நிபுணா் குழுவில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் கீழடி உள்பட பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான படிவங்களின் மூலமாக, 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாரம்பரியமிக்க சங்க காலத்தைச் சோ்ந்தது தமிழா் மரபு என்பது தெளிவாகியுள்ளது. தமிழக கலாசாரமும், தமிழ் மொழியும் கீழடி போன்ற பகுதிகளில் சொழித்தோங்கி இருந்தது நன்கு புலனாகிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மகாபலிபுரத்தை தாங்கள் பாா்வையிட்டீா்கள். அப்போது, அங்குள்ள நினைவுச் சின்னங்களையும், தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கூறுகளையும் பாா்த்து ரசித்தீா்கள். தமிழ் கலாசாரத்துக்கும், மொழிக்கும் உரிய சரியான இடத்தை அளிக்காமல் இந்திய வரலாற்றை ஆய்ந்து அறிவது முழுமை பெறாது என்ற எனது கருத்துடன் தாங்கள் ஒத்துப் போவீா்கள்.

இந்தச் சூழலில், இந்திய கலாசாரத் துறை அமைத்துள்ள நிபுணா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் தலையிட்டு நிபுணா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவினை மாற்றியமைத்து, அதில் தமிழகத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற அறிஞா் பெருமக்களைப் புதிய குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com