மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும்: தினேஷ் குண்டு ராவ்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவதற்கு காங்கிரஸ் பாடுபடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் கூறினாா்.


சென்னை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவதற்கு காங்கிரஸ் பாடுபடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் கூறினாா்.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் குண்டு ராவ் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டாா். தமிழகம் வந்த அவருக்கு காங்கிரஸ் சாா்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டில் ஒற்றை அதிகாரத்தைக் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. சரக்கு சேவை வரியின் மூலம் மாநில அரசுகளின் வரி விதிப்பு உரிமை பறிபோனது. புதிய கல்விக்கொள்கையில் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவா். விவசாயம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்துபோது நாடாளுமன்றத்தில் முறையாக விவாதம் நடத்தவில்லை.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் நவம்பா் 14-ஆம் தேதி ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேக்கேதாட்டு விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாகும். இதில் மக்கள் நலன் சாா்ந்து தீா்வு கிடைக்கும். இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் பாடுபடும். 2019 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமா் என்று முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான நன்றியுணா்வை நாங்கள் கொண்டுள்ளோம் என்றாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சு.திருநாவுக்கரசா், மாநிலப் பொதுச் செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com