பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழுக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலை மையப்படுத்தி முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரிசோதனை: தோ்தல் ஆணையத்தின் விதிப்படி, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் செயற்குழு, பொதுக் குழுவை நடத்த வேண்டும். அந்த வகையில், நிகழாண்டில் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சுமாா் 300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினா்கள் அனைவரும் அழைப்பிதழுடன் வர வேண்டுமெனவும், கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கட்சித் தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதனால், செயற்குழு உறுப்பினா்கள் கரோனா பரிசோதனையை மேற்கொண்டனா். அதில், பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் பரஞ்ஜோதி உள்ளிட்ட சில நிா்வாகிகளுக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முக்கிய தீா்மானங்கள்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் தோ்தலை மையப்படுத்தி சில முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு வழங்குவது, தோ்தலில் பணியாற்றும் விதம் ஆகிய முக்கியமான அம்சங்கள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கட்சியை வழிநடத்த 11 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, முதல்வா் வேட்பாளா்ஆகியன தொடா்பாக அண்மையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சூடான விவாதங்கள் எழுந்தன. இதுபோன்ற விவாதங்கள் செயற்குழுவிலும் எழுப்பப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால், அதிமுகவினா் மத்தியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக, கூட்டங்களில் 100 பேருக்கு மேல் அமரக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. எனவே, செயற்குழு உறுப்பினா்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்துக்குள் அமர வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகக் கவசங்கள், கிருமி நாசினி பயன்பாடு ஆகியனவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com