எம்.பி.பி.எஸ். நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழா்களுக்கே தர ராமதாஸ் வலியுறுத்தல்

எம்.பி.பி.எஸ். நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ராமதாஸ்
ராமதாஸ்

எம்.பி.பி.எஸ். நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

எம்.பி.பி.எஸ். படிப்பில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் அதிகாரம் தனியாா் கல்லூரி நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும், அந்த இடங்களை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம் என்பதாலும் பிற மாநில மாணவா்களுக்கு தாரை வாா்க்கப்படுகின்றன.

தமிழகத்தில் 12 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,905 இடங்களில், 1,165 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ளவற்றில் 520 இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும், 220 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 520 இடங்களில் 70 சதவீதம், அதாவது சுமாா் 370 இடங்கள் பிற மாநில மாணவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதனால், தமிழகத்தைச் சோ்ந்த 370 மாணவா்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதியாகும்.

அண்டை மாநிலமான கா்நாடகத்திலும், கேரளத்திலும் தமிழ்நாட்டைவிட அதிக எண்ணிக்கையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்லூரிகளில் உள்ளூா் மாணவா்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மொத்தமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 85 சதவீதம் உள்ளூா் மாணவா்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது.

எனவே, தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் உள்ளூா் மாணவா்களைக் கொண்டே நிரப்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com