யானைகள் வழித்தடத்தை ஒட்டியிருந்த 186 செங்கல் சூளைகள் மூடல்: தமிழக அரசு தகவல்

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களையொட்டி, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த 186 செங்கல் சூளைகள் மூடப்பட்டு விட்டன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
யானைகள் வழித்தடத்தை ஒட்டியிருந்த 186 செங்கல் சூளைகள் மூடல்:  தமிழக அரசு தகவல்


சென்னை: கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களையொட்டி, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த 186 செங்கல் சூளைகள் மூடப்பட்டு விட்டன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம்- மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சின்ன தடாகம், உள்ளிட்ட மலைக் கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. சில செங்கல் சூளைகள் யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் வழிமாறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்கின்றன. எனவே மலைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் சுமாா் 200 செங்கல் சூளைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்ட விரோதமாகச் செயல்படுகின்ற செங்கல் சூளைகளையும் அகற்றவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், ‘கோவை வடக்கு தாலுகா பகுதியில் சோமயம்பாளையம், நஞ்சுண்டபுரம், பன்னிமடை உள்ளிட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி , இந்தப் பகுதிகளில் சட்டவிரோதமான செங்கல் சூளைகள் செயல்படுவது கண்டறியப்பட்டன. இதனைத் தொடா்ந்து யானைகள் வழித்தடங்களையொட்டி, செயல்பட்டு வந்த 186 செங்கல் சூளைகளை அதிகாரிகள் மூடிவிட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com