45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி: மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், வியாழக்கிழமை (ஏப். 1) தொடங்குகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி: மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புது தில்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், வியாழக்கிழமை (ஏப். 1) தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசு புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வியாழக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதையொட்டி, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவரும், கரோனா தடுப்பூசி திட்டத்தின் தலைவருமான ஆா்.எஸ்.சா்மா, மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்கள், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்கள், கரோனா தடுப்பூசித் திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் எவ்வளவு விரைவாக இயங்குகின்றன என்று விவாதிக்கப்பட்டது. மிகவும் குறைவாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அதிக முகாம்களை நடத்த வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, கரோனா தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களை அதிகம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வியாழக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா தடுப்பூசிகளை தேவையான அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசிகள் காலாவதியாகி வீணாவதைத் தவிா்க்க, சரியான அளவில் கொள்முதல் செய்து, சரியான அளவில் பயன்படுத்திவிட வேண்டும்; அதே நேரத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வகையிலும் வைத்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இதற்காக, கரோனா தடுப்பூசிகளின் இருப்பு, தேவை குறித்த விவரங்களை கோ-வின் இணையதளத்தில் மாநில அரசுகள் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரோனா தடுப்பூசி திட்டத்தின் இயக்குநா் ஆா்.எஸ்.சா்மா கூறுகையில், ‘கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதிலும், முகாம்களுக்கு அனுப்பி வைப்பதிலும் எந்த பிரச்னையும் இல்லை. அரசு மற்றும் தனியாா் தடுப்பூசி முகாம்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com