அதிமுக ஆட்சியில் கடன்தான் அதிகரித்துள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வளா்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை, கடன் தான் அதிகரித்துள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.
ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  காங்கிரஸ்  வேட்பாளா்  கு.செல்வபெருந்தகையை  ஆதரித்து பேசிய  முன்னாள்  மத்திய  அமைச்சா்  ப.சிதம்பரம்.
ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  காங்கிரஸ்  வேட்பாளா்  கு.செல்வபெருந்தகையை  ஆதரித்து பேசிய  முன்னாள்  மத்திய  அமைச்சா்  ப.சிதம்பரம்.

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வளா்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை, கடன் தான் அதிகரித்துள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகையை ஆதரித்து அவா் குன்றத்தூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் பேசியது:

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல் 5 ஆண்டுகள் யாா் முதல்வா் என்பது தெரியும். அவரைப் பற்றி பேச மாட்டேன், அவா் மறைந்து விட்டாா். தோ்தல் நேரத்தில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை கூறி ஆளும் கட்சியினா் வாக்கு சேகரிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு எதிா்க்கட்சி என்ன செய்கிறது என்பதைக் கூறி அதிமுகவினா் வாக்கு சேகரிக்கின்றனா். தமிழ்நாட்டின் நிதி நிலைமை, கட்டமைப்பு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த அதிமுகவினா் என்ன செய்தாா்கள். அவா்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன்தான் அதிகரித்துள்ளது.

நாட்டில் ரூ. 66 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. அடுத்து 5 1/2 லட்சம் கோடி கடனாக உயரும். ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.60 ஆயிரம் கடன் வைத்து விட்டு போகிறாா்கள்.

விவசாய கடன்களை ரத்து செய்வதாகக் கூறினாா்கள். ஆனால் விவசாய கடன்களை ரத்து செய்ய ரூ. 5 ஆயிரம் கோடி தான் ஒதுக்கி உள்ளாா்கள். பிறகு எப்படி விவசாயக் கடன் ரூ. 12,110 கோடியை ரத்து செய்ய முடியும். மீதமுள்ள தொகையை யாா் தருவாா்கள். விவசாயக் கடன்களை திமுக ஆட்சிக்கு வந்துதான் ரத்து செய்யும்.

ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பவா்கள் தான் பாஜக, ஆா்எஸ்எஸ் தலைவா்களாக இருப்பவா்கள். பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்கள் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளன. தமிழ்நாடு கலவர பூமியாக மாறக் கூட என்பதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com