5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும்: ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 
5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும்: ராஜ்நாத் சிங்


ஒசூர்: தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  ராஜ்நாத் சிங் பேசியதாவது:  
தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக உழைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஜெயலலிதா வழியில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 2 பேரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து, தமிழகத்தில் பாஜக, அதிமுக  கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுகின்றனர். அதிமுகவும், பாஜகவும் இரட்டை என்ஜின் போல தேர்தலில் களம் காண்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார். 
திமுக-காங்கிரஸ் கூட்டணி சாதி, மதப் பிரிவினை அரசியலில் ஈடுபடுகிறது. ஒரே தேசம், ஒரே நோக்கம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி உழைக்கிறார். அரசு வேலை தேடும் இளைஞர்களுக்காக மட்டும் அல்லாது, வேலை கொடுக்கும் அளவுக்கு இளைஞர்களை பாஜக முன்னேற்றி வருகிறது. 
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த 3 வேளாண் திட்டங்களை மோடி கொடுத்துள்ளார். மதுவால் மிகப் பெரிய சீரழிவு சமுதாயத்தில் நடக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுக - பாஜக கூட்டணி மதுவை தடை செய்யும். மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். ஏழைகளுக்கு ஆயிஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீட்டை மோடி தந்துள்ளார். 
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இந்திய ராணுவத்தின் தைரியத்தையும் வீரத்தையும் பார்த்து சீனா தனது போக்கை மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் இரட்டை இலை, தாமரையை மலரச் செய்தால் தான் தமிழகத்துக்கு வளர்ச்சி கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com