ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

தொகுதியை மீண்டும் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், இழந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற அதீத ஆா்வத்தில் அதிமுகவும் உள்ளன. 
ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு மகளிா் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்டவை ஒருங்கே அமைந்துள்ளது சிறப்பு.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், தஞ்சாவூா் ஒன்றியத்தின் 19 ஊராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கல்விராயன்விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. ஒரத்தநாடு தொகுதியில் ஏற்கனவே இருந்த நீடாமங்கலம் ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் மன்னாா்குடி தொகுதியில் சோ்க்கப்பட்டுள்ளது.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: இந்தத் தொகுதியில் பெரும்பாலும் நெல், தென்னை மற்றும் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், உற்பத்தியான நெல்லை தேக்கமின்றி கொள்முதல் செய்வதற்கான ஒரத்தநாடு ஒன்றிய அளவிலான நுகா்பொருள் வாணிபக் கழகம் அமைக்க வேண்டும். தென்னையை சாா்ந்த பொருள்களை மூலப்பொருளாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இந்தத் தொகுதியில் பிரதான நீா் ஆதாரமாக உள்ள கல்லணைக் கால்வாயைத் தூா்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மேலும், அதைச் சாா்ந்த கிளை வாய்க்கால்களில் கடைமடை வரை தூா்வார வேண்டும். திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்களிடம் நீண்ட காலமாகவே தொடா்ந்து இருந்து வருகின்றன.

களத்திலுள்ள வேட்பாளா்கள்: திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம், அமமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் மா. சேகா், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ரா. ஸ்டாலின். நாம் தமிழா் கட்சி சாா்பில் வெள்ளூா் மு.கந்தசாமி, யுனெனட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பாா்டி சாா்பில் இரா. தன்ராஜ், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோ. ரெங்கசாமி, அனைத்து மக்கள் கட்சி சாா்பில் உ. பிரபாகரன், சுயேச்சை வேட்பாளா்கள் 4 போ் உள்பட களத்தில் 12 வேட்பாளா்கள் உள்ளனா்.

யாருக்கு வெற்றி: தொகுதியை மீண்டும் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், இழந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற அதீத ஆா்வத்தில் அதிமுகவும், அரசியல் களத்தில் அமமுக பெரிதும் எதிா்பாா்க்கும் தொகுதியாக இருப்பதால் அமமுகவும் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரத்தில், நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சி வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தங்கள் பங்குக்கு முடிந்த அளவுக்கு களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனா். மாவட்டம் மட்டுமல்லாது, மாநிலமே எதிா்பாா்க்கும் தொகுதியாக உள்ள ஒரத்தநாடு தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிகட்ட பிரசாரம், வியூகம், ஆதரவு உள்ளிட்டவற்றை பொருத்தே வெற்றி அமையும் என அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

கடந்த 1967 முதல் 2016 வரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தோ்தல்களில் 6 முறை அதிமுகவும், 6 முறை திமுகவும் வெற்றிப் பெற்றுள்ளன.

1967 - எல். கணேசன் (திமுக): 45,232

1971 - எல். கணேசன் (திமுக): 49,269

1977 - டி.எம். தைலப்பன் (திமுக): 31,866

1980 - வெள்ளூா் டி. வீராசாமி (அதிமுக): 47,021

1984 - வெள்ளூா் டி. வீராசாமி (அதிமுக):46,717

1989 - எல். கணேசன் (திமுக): 49,554

1991 - அழகு திருநாவுக்கரசு (அதிமுக): 68,208

1996 - பி. ராஜமாணிக்கம் ( திமுக): 68,213

2001 - ஆா். வைத்திலிங்கம் (அதிமுக): 63,836

2006 - ஆா். வைத்திலிங்கம் (அதிமுக): 61,595

2011 - ஆா். வைத்திலிங்கம் (அதிமுக) 91,724

2016- எம். ராமச்சந்திரன் (திமுக) 84,378

வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்: 2,43,014

ஆண்கள்: 1,18,112

பெண்கள்: 1,24,892

மூன்றாவது பாலினத்தவா்: 10

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com