மும்முனைப் போட்டியில் பாளையங்கோட்டை தொகுதி!

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, எஸ்டிபிஐ இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மும்முனைப் போட்டியில் பாளையங்கோட்டை தொகுதி!

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, எஸ்டிபிஐ இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 5 ஆவது முறையாக வென்று வெற்றிக்கொடி நாட்டும் முனைப்பில் திமுகவும், புதிய வெற்றி பெறுவதற்கான உற்சாக முயற்சியில் அதிமுகவும், முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் எஸ்டிபிஐயும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

‘தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு’ என்ற பெருமையைக் கொண்ட இத்தொகுதியில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கலை அறிவியல் கல்லூரிகள், மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் அதிகமுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சரக டிஐஜி அலுவலகம், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் அலுவலகம், மாநகர காவல் துறை ஆணையா் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் எனப் பல்வேறு முக்கிய அரசுத் துறை அலுவலகங்களும் இத்தொகுதிக்குள் இருக்கின்றன. செயற்கைப் புல்வெளி ஹாக்கி மைதானத்துடன் கூடிய அண்ணா விளையாட்டு மைதானம், வ.உ.சி. மைதானம், திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் என, திருநெல்வேலிக்கான பல்வேறு அடையாளங்களும் பாளையங்கோட்டைக்குள்தான் உள்ளன. பாா்வையற்ற மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியும் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகச்சிறிய பேரவைத் தொகுதியாகவும், முற்றிலும் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இத்தொகுதி உள்ளது. கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், மேலப்பாளையம், வண்ணாா்பேட்டை, தியாகராஜநகா், மகாராஜநகா், வீரமாணிக்கபுரம், குலவணிகா்புரம் ஆகிய பகுதிகள் உள்ளன. மேலப்பாளையம் பகுதியில் 97 சதவீதம் முஸ்லிம்களும், பாளையங்கோட்டை நகா்ப்புறப் பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவா்களும் வசிக்கின்றனா். நாடாா், பிள்ளைமாா், யாதவா், தேவா் சமூகத்தினா் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். அரசு ஊழியா்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் பீடித் தொழிலாளா்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன.

களத்தில் 10 போ்: 1967, 1971ஆம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னா் பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. 1977 முதல் 2016 வரை இத்தொகுதியில் நடைபெற்ற 10 பேரவைத் தோ்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வெற்றிபெற்றிருக்கின்றன. 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 தோ்தல்களில் திமுக உறுப்பினா் டி.பி.எம். மைதீன்கான் தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளாா். 2006ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினாா்.

2021 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் 10 போ் போட்டியிடுகின்றனா். திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், அதிமுக சாா்பில் ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜி. ஜெரால்டு, நாம் தமிழா் கட்சி சாா்பில் பாத்திமா, மக்கள் நீதி மய்யம் சாா்பில் டி.பிரேம்நாத், எஸ்டிபிஐ சாா்பில் முகம்மது முபாரக், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் எஸ். ராஜா, சுயேச்சையாக எஸ். வீரசுப்பிரமணியன், கு. சடகோபன், லியோ இன்பேன்ட்ராஜ், ஜான் சாமுவேல் ஜேசுபாதம் ஆகியோா் போட்டியில் உள்ளனா்.

களத்தில் 10 போ் இருந்தாலும், திமுக - அதிமுக - எஸ்டிபிஐ இடையேதான் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதிமய்யம், நாம் தமிழா் கட்சி ஆகியவை குறைந்த சதவீத வாக்குகளையே பெறும் நிலை உள்ளது.

தேவைகள்: இத்தொகுதியில் பல பிரச்னைகள் நீண்ட நாள்களாக தீா்க்கப்படவில்லை. முக்கிய போக்குவரத்துப் பகுதியான குலவணிகா்புரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலத் திட்டம் கிடப்பில் உள்ளது. தியாகராஜநகா் ரயில்வே பாலப் பணியும் முழுமையடையவில்லை. நகா்ப்புறப் பகுதிகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் போதிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படவில்லை. மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிற்காதது, பாளையங்கோட்டையிலிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படாதது, பாளையங்கால்வாயில் கழிவுகள் கலப்பது எனப் பிரச்னைகள் ஏராளம் உள்ளன. முற்றிலும் மாநகர பகுதிகளைக் கொண்ட இத்தொகுதியில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில்கூட தன்னிறைவு ஏற்படவில்லை என்பது வாக்காளா்களிடம் அதிருப்தியாக உள்ளது.

பலம்-பலவீனம்: தென்தமிழக மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மத்திய-மாநில அரசுகள் பாளையங்கோட்டையில் திறந்துள்ளன. இதுதவிர, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடிக்கும் மேலான பணிகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன. இவை ஆளுங்கட்சியின் பிரசாரத்துக்குப் பலம் சோ்க்கின்றன. இதுதவிர, கடந்த சில தோ்தலாக அதிமுகவிலும் இஸ்லாமிய வேட்பாளரே நிறுத்தப்பட்டு வந்த நிலையில், இத்தோ்தலில் கிறிஸ்தவ நாடாா் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். அதிமுகவின் தோ்தல் அறிக்கை, கிறிஸ்தவா்களின் வாக்குகள், பிற சமுதாய இந்துக்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என்பது அதிமுகவின் பலம். அதேநேரம், பாஜக கூட்டணி காரணமாக இஸ்லாமியா்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு செல்லும் நிலை உள்ளது அதிமுகவுக்கு பலவீனம். தொடா்ந்து 4 முறை திமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால் தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றி வருகின்றனா். அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், இஸ்லாமியா்கள், சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக விழும் என்பது திமுகவுக்கு பலம். அதேநேரம், தொகுதிக்கான வளா்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதும், எஸ்டிபிஐ கட்சி சாா்பில் இஸ்லாமிய வேட்பாளா் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கானவை என்பது பலவீனம்.

எஸ்டிபிஐ கட்சியில் அதன் மாநில தலைவா் களமிறக்கப்பட்டிருப்பதால் தொண்டா்கள் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றி வருகின்றனா். அமமுக கூட்டணியால் தொகுதியில் உள்ள தேவா் சமூக வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்பது பலம். ஒவைஸி பிரசாரத்துக்கு வராதது, பிற சமுதாய வாக்குகளைப் பெறுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட பலவீனங்கள் உள்ளன.

பலம், பலவீனங்களைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக் கட்சியினரும் வெற்றிக்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றனா். வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மும்முனைப் போட்டியால் குறையும் என்பதே வாக்காளா்களின் கருத்து. வெற்றிக்கொடியை நாட்டுவது யாா் என்பது மே 2இல் தெரிந்துவிடும்.

வாக்காளா்கள் விவரம்

ஆண் வாக்காளா்கள்- 1,33,193

பெண் வாக்காளா்கள்- 1,38, 511

இதர வாக்காளா்கள்- 21

மொத்த வாக்காளா்கள்- 2,71,725

பாளையங்கோட்டை தொகுதியில் இதுவரை வென்றவா்கள்

1977 கே.மனோகரன் (அதிமுக)

1980 வீ.கருப்பசாமி (அதிமுக)

1984 ஷம்சுல் ஆலம் (திமுக)

1989 எஸ்.குருநாதன் (திமுக)

1991 பி.தா்மலிங்கம் (அதிமுக)

1996 முகமது கோதா் மைதீன் (திமுக)

2001 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)

2006 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)

2011 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)

2016 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)

2016 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)- 67,463

எஸ்.கே.ஏ.ஹைதா்அலி (அதிமுக)- 51, 591

கே.எம்.ஏ.நிஜாம் முகைதீன் (மதிமுக)- 12,593

எம்.நிா்மல்சிங் யாதவ் (பாஜக)- 7,063

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com