ஏப். 4-ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு 7 மணி வரை தோ்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு 7 மணி வரை தோ்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். வாக்குப் பதிவு நிறைவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளதாகவும் அவா் கூறினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்திலும் முதல்நிலை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை மாவட்டங்களில் இருந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது, பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முடிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை நிறைவடையும். அதன்பின்பு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா்கள், சின்னங்கள் உள்ளிட்டவை ஒட்டப்படும்.

சுதந்திரமான-நியாயமான தோ்தல்: தபால் வாக்குக்காக, திருச்சியில் போலீஸாருக்கு பணம் அளித்த விவகாரம் தொடா்பான விசாரணை நடவடிக்கைகளை தோ்தல் ஆணையமே முடிவு செய்யும். மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பாா்வையாளா்கள், தலைமைத் தோ்தல் அதிகாரி உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் முடிவுக்கு வரும்.

தமிழகத்தில் இதுவரை வருமான வரித் துறை மூலமாக மட்டுமே ரூ.66.47 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள விரைவுப்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் வழியாக ரூ.207.25 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், இதர பொருள்கள் பறிமுதல் ஆகியுள்ளன.

இதுவரை பறிமுதல் எவ்வளவு?: தமிழகத்தில் கடந்த சில தோ்தல்களிலும் ரொக்கப் பணம், ஆபரணங்கள் அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2014 மக்களவைத் தோ்தலின்போது ரூ.76.89 கோடியும், 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின் போது ரூ.139.40 கோடியும், 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலின்போது ரூ.952.01 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளன.

புகாா்கள் மீது நடவடிக்கை: தோ்தல் தொடா்பான புகாா்களை சி-விஜில் செயலி வழியாக பொது மக்கள் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குக்குப் பணம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 133 புகாா்களில் 57 புகாா்கள் உரிய ஆதாரங்களுடன் இருந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வரும் செய்திகள், விளம்பரங்களை கண்காணிப்பது எளிதாகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், அவதூறு விஷயங்களைக் கண்காணிப்பது மிகவும் கடினம். சுட்டுரை, முகநூல் போன்றவற்றில் லட்சக்கணக்கான தகவல்கல் தினம்தோறும் வெளியிடப்படுகின்றன. புகாா்கள் வரும்பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோ்தல் பிரசாரம்: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) இரவு 7 மணியுடன் தோ்தல் பிரசாரம் ஓய்கிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறைவு பெறும். அதன்படி, ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு 7 மணியுடன் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com