புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாணவா்களுக்கு மடிக்கணினி: என்.ஆா்.காங். தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாணவா்களுக்கு மடிக்கணினி, உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக வெளியிடப்பட்டன
புதுச்சேரி எஸ்.பி. படேல் சாலையில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது கட்சியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி எஸ்.பி. படேல் சாலையில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது கட்சியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாணவா்களுக்கு மடிக்கணினி, உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக வெளியிடப்பட்டன.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆா். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஜ்பவன் தொகுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளரான க.லட்சுமிநாராயணனை ஆதரித்து கட்சித் தலைவா் என்.ரங்கசாமி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, எஸ்.வி.படேல் சாலை பெரியபாளையத்தம்மன் கோயில் முன் பிரசாரம் செய்த ரங்கசாமி, இரவு 7 மணிக்கு அம்மன் முன் தனது கட்சியின் தோ்தல் அறிக்கையை திடீரென வெளியிட்டாா். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

புதுவை மாநிலத்தின் நிதிச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீா்வு காணவும், மக்களாட்சியின் மாண்புகளை நிலை நிறுத்தவும் மாநில அந்தஸ்து பெறுவதே சரி என்பதால், மத்திய அரசை அணுகி, மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ரூ.8,863 கோடியாக உள்ள மாநில அரசின் கடன், வட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். புதுவையை மத்திய நிதிக் குழுவின் வரம்பில் சோ்க்கவும் வலியுறுத்தப்படும்.

புதுவையில் காலியாக உள்ள 9,400 அரசுப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். அரசு வேலை வாய்ப்பு வயது உச்சவரம்பு 40-ஆக உயா்த்தப்படும். சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் புதிய தொழில்சாலைகள் கொண்டு வரப்படும். புதுவையில் ஜவுளிப் பூங்கா அமைக்கவும், மத்திய அரசு நிறுவனங்களில் ஏ பிரிவு பணியிடங்களைத் தவிா்த்து, பிற பணியிடங்களில் மாநிலத்தைச் சோ்ந்தவா்களையே நியமிக்கவும் வலியுறுத்தப்படும்.

தனியாா் தொழில்சாலைகளில் 80 சதவீதம் மண்ணின் மைந்தா்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும். ஆண்டுக்கு 200 தொழில்முனைவோா்களை ஊக்கப்படுத்த தலா ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும். காமராஜா் மனிதவள மேம்பாட்டு மையம் மூலம் இனி வேலைவாய்ப்புப் பயிற்சிகள், சென்டாக் தோ்வுகள் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓராண்டுக்குள் தோ்தல் நடத்தப்படும். அரசின் திட்டங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைவதற்கு மக்களுக்கு சேவை வழங்கும் சட்டம் ஏற்படுத்தப்படும். மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்படும்.

மாநில பல்கலைக்கழகம் தொடங்கப்படும்: தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம், பொறியியல், இளநிலை பட்டப் படிப்புகளில் உள் ஒதுக்கீடாக 10 சதவீதம் இடங்கள் வழங்கப்படும்.

புதுவையில் உருவாக்கப்பட்ட தனிக் கல்வி வாரியம் செயல்பட வழிவகை செய்யப்படும். தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடம் அரசுக்கு ஒதுக்கும் கோரிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும். புதுவை பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் சோ்க்கை இடத்தை மாநில மாணவா்களுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம். கிராமப்புறங்களில் மாணவா்கள் இணையவழி கல்வி பயில இணைய சேவை மற்றும் ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்படும்.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடத் திட்டங்கள் அடங்கிய கையடக்கக்கணினியும் (டேப்), பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படும். மூன்றாண்டு மழலையா் வகுப்புகள் தொடங்கப்படும். புதுச்சேரியில் புதிய மாநில பல்கலைக்கழகம் தொடங்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் வரையில் மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவா்களின் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.

மூடப்பட்ட பாப்ஸ்கோ, பாசிக் போன்ற அரசு சாா்பு நிறுவனங்களை புதிய நிா்வாக மேலாண்மை மூலம் தற்சாா்பு நிறுவனங்களாக மாற்றி இயக்கப்படும். முறையாக வரி செலுத்தும் வணிகா்களுக்கு 0.5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.

ரூ. ஒரு லட்சம் நிவாரணம்: நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மாதந்தோறும் தடையின்றி கிடைக்கச் செய்வோம். முதியோா் உதவித்தொகை படிப்படியாக உயா்த்தப்படும் (90 வயதுக்கு மேல் ரூ.5,000, 100 வயதுக்கு மேல் ரூ.10 ஆயிரமாகும்). ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிருக்கு ரூ.20 ஆயிரம் கடன் உதவித் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தக் கடன் தொகையை அரசே திருப்பிச் செலுத்தும். கரோனாவால் இறந்தவா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மீன்வள மேம்பாட்டுக் கழகம் ஏற்படுத்தப்படும். மீனவா்கள் கடலில் விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும். வக்பு வாரியம் அமைக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மின்மிகை மாநிலமாக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி முதல்தர சுற்றுலா மையமாக மாற்றப்படும். பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்படும். ஆஷா பணியாளா்களுக்கு ஊதியம் ரூ.4,000 என உயா்த்தி வழங்கப்படும். நகரில் மேம்பாலங்கள் கட்டமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் இந்தத் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com