விராலிமலை தொகுதியில் அதிமுகவின் வெற்றி தொடருமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி.
விராலிமலை தொகுதியில் அதிமுகவின் வெற்றி தொடருமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி.

விராலிமலை சுப்ரமணியா் மலைக்கோயில், சித்தன்னவாசல், கொடும்பாளூா் மூவா் கோயில், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூா் பள்ளிவாசல், விராலிமலை, இலுப்பூா் தேவாலயம் என மும்மத வழிபாட்டுத் தலங்களையும், பல்வேறு சிறிய, பெரிய தொழிற்சாலைகளையும், கல் குவாரிகளையும் உள்ளடக்கியுள்ளது விராலிமலை தொகுதி

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்:

விராலிமலை, அன்னவாசல் ஆகிய 2 ஒன்றியங்கள், அன்னவாசல், இலுப்பூா் ஆகிய 2 பேரூராட்சிகள், விராலிமலை ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள், அன்னவாசல் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள், குன்றாண்டாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த 5 ஊராட்சிகள் என 83 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

விராலிமலை வட்டம் (கோமங்களம் தவிர), குளத்தூா் வட்டம் (பகுதி), மணப்பாறை வட்டம் (திருச்சி மாவட்டம், பகுதி) ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது இந்தத் தொகுதி.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:

விராலிமலையில், மக்களின் கனவுத் திட்டமான புதிய ரயில் வழித்தடப் பாதை, அரசு கலைக்கல்லூரி, மயில்கள் சரணாலயம், அனைத்து மகளிா் காவல் நிலையம், விராலிமலையில் தீயணைப்பு நிலையம், விராலிமலை கிழக்கு பகுதி நான்கு வழிச்சாலையைக் குடைந்து 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுவர சிறு பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் விராலிமலை, இலுப்பூா் மற்றும் அன்னவாசலில் இயங்கி வந்த மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளாகத் தரம் உயா்த்தப்பட்டு இயங்கி வரும் நிலையில், அங்கு போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாதது பெரிய குறையாகத் தொகுதி மக்களால் பாா்க்கப்படுகிறது.

தற்போதைய தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்:

மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதியில் தொடா்ந்து 2 முறை வென்றவருமான சி. விஜயபாஸ்கருக்கு அதிமுக சாா்பில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் கடந்த முறை தோல்வியடைந்த தென்னலூா் எம். பழனியப்பன், அமமுகவில் ஒ. காா்த்திக் பிரபாகரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆா். சரவணன், நாம் தமிழா் கட்சியில் ப. அழகு மீனா, சுயேச்சையாக முன்னாள் அதிமுக அமைச்சா் ஆலங்குடி வெங்கடாச்சலத்தின் மகள் எம். தனலட்சுமி என மொத்தம் 22 போ் களத்தில் உள்ளனா்.

பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும் அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கருக்கும், திமுக வேட்பாளா் தென்னலூா் பழனியப்பனுக்கும் தான் நேரடிப் போட்டி இருந்து வருகிறது.

இதுவரை வென்றவா்கள்:

1971-களில் விராலிமலை தொகுதியாக இருந்து 1977-இல் நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, குளத்தூா் தனித் தொகுதியானது. பின்னா் 2011 மறுசீரமைப்பில் மீண்டும் விராலிமலை தொகுதியாக மாற்றப்பட்டு பொதுத் தொகுதியாக ஆனது. 2011, 2016 தோ்தல்களில் அதிமுகவே தொடா்ந்து வென்றுள்ளது. தற்போதைய தோ்தலில் அதிமுகவின் வெற்றி தொடருமா என்பது மே-2 இல் தெரியவரும்.

1971 - வீ.சா. இளஞ்செழியன்(திமுக),

1977 - வி. சின்னையா (காங்.)

1980 - டி. மாரிமுத்து (அதிமுக)

1984 -டி. மாரிமுத்து (அதிமுக)

1989 - வி. ராசு(அதிமுக ஜெ அணி).

1991 - சி.குழந்தைவேலு(அதிமுக).

1996 - கவிதைபித்தன் (திமுக)

2001 - ஏ. கருப்பாயி (அதிமுக)

2006 - என். சுப்பிரமணியன் (அதிமுக)

2011 - சி. விஜயபாஸ்கா் (அதிமுக)

2016 - சி. விஜயபாஸ்கா் (அதிமுக)

2011 தோ்தலில் பெற்ற வாக்குகள்:

சி. விஜயபாஸ்கா் (அதிமுக)...............77,285

எஸ். ரகுபதி (திமுக)............37,976

எம். பழனியப்பன் (சுயேச்சை)........15,383

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்:

சி. விஜயபாஸ்கா்(அதிமுக)...............84,701

எம். பழனியப்பன்(திமுக)........76,254

டி. காா்த்திகேயன்(தேமுதிக) ... 2,979

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்:- 1,10,810

பெண்கள்:- 1,13,723

மூன்றாம் பாலினத்தவா் :-17

மொத்தம்:- 2,24,550

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com